வளைகுடா செய்திகள்

அனைத்து GCC நாடுகளுக்கும் ஒருங்கிணைக்கப்படும் சாலை விதிமீறலுக்கான அபராத அமைப்பு..!! விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல்..!!

அனைத்து GCC நாடுகளிலும் செய்யப்படும் போக்குவரத்து மீறல்கள் இப்போது ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு மூலம் இணைக்கப்படும் என்று புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இது செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற வளைகுடா அரபு நாடுகளுக்கான ஒத்துழைப்பு கவுன்சிலின் 19வது கூட்டத்தின் போது, ​​வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த முடிவை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ மாநாட்டின் போது இந்த செயல்முறையின் சமீபத்திய திட்டங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை GCC துறைகளுக்கு இடையே செயல்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது விபத்துக்கள் மற்றும் விதிமீறல்களின் விகிதத்தைக் குறைப்பதுடன், வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களிடையே பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் GCC நாடுகளிடையே சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் எளிதான தரவு பரிமாற்றத்தை செயல்படுத்த புதிய திட்டம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் இணைக்கப்பட்ட ஃபைன் சிஸ்டமும் அதன் இறுதிக் கட்டத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முறை தொடங்கப்பட்டதும், அனைத்து GCC நாடுகளிலும் உள்ள வாகன ஓட்டிகள் எந்த நாட்டில் விதிகளை மீறினாலும் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பின் தாங்கள் வசிக்கும் நாட்டிற்குத் திரும்பியதும், இந்த இணைக்கப்பட்ட அமைப்பின் மூலம் வாகன ஓட்டி அபராதம் செலுத்த முடியும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!