அமீரக செய்திகள்

UAE: ‘1 பில்லியன் மீல்ஸ்’ திட்டத்திற்கு ஒரே வாரத்தில் கிடைத்த 247 மில்லியன் திர்ஹம்ஸ் நன்கொடை…!!

துபாயின் துணைத் தலைவரும், பிரதமரும், ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ‘1 பில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரத்தின் மூலம் இதுவரை 247 மில்லியன் திர்ஹம் நிதியை திரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பிரச்சாரம் தொடங்கிய ஒரு வாரத்தில் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் என சுமார் 13,220 முக்கிய பங்களிப்பாளர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. அவர்களில், 13,195 பங்களிப்பாளர்கள் ஸ்மார்ட் சேனல்கள் மூலம் நன்கொடை அளித்துள்ளனர்.

ஏழைகளுக்கு உணவளிக்க நடத்தப்படும் இந்த பிரச்சாரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொண்டு மற்றும் தாராள மனப்பான்மையை பிரதிபலிப்பதுடன், மேலும் தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் விடுத்த அழைப்புக்கு மக்களிடமிருந்து பரந்த அளவிலான உதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது குறித்து முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகளின் பொதுச்செயலாளர் முகமது அல் கெர்காவி அவர்கள் பேசுகையில், பசியை ஒழிப்பதற்கான இந்த பிரச்சாரமானது அமீரகத்தின் தார்மீக பொறுப்புணர்விற்கு ஒரு சிறந்த சான்றாகும் என்றும், இது அமீரகத்தின் மனிதாபிமான முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல் என்றும் விவரித்துள்ளார். மேலும், எதிர்வரும் நாட்களில் நன்கொடை வழங்குவதற்கு கூடுதலான மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புவதாகாவும் அவர் தெரிவித்துள்ளார்.

பசியை விரட்டியடிப்பதற்கும், உலகெங்கிலும் உள்ள பாதிக்கப்படக்கூடிய மக்களை ஆதரிப்பதற்கும் பயனுள்ள திட்டங்களை செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ள ‘1 பில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரத்திற்கு https://www.1billionmeals.ae/ என்ற லிங்க் மூலம் மக்கள் நன்கொடையளிக்கலாம். அத்துடன் கட்டணமில்லா எண் வழியாக ஒரு பிரத்யேக அழைப்பு மையம் (800 9999) எமிரேட்ஸ் NBD (AE30 0260 0010 1533 3439 802) உடனான பிரச்சார வங்கிக் கணக்கு எண்ணுக்கு பணமாகவும் நன்கொடைகள் பெறப்படுகிறது.

அத்துடன் ‘du’ மொபைல் பயனர்கள் 1020 என்ற எண்ணிற்கும், ‘Etisalat’ மொபைல் பயனர்கள் 1110 என்ற எண்ணிற்கும் “Meal” என்ற வார்த்தையை SMS அனுப்புவதன் மூலமாகவும், மாதாந்திர சந்தா மூலம் தினசரி 1 AED  நன்கொடைகளை அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே, DubaiNow ஆப் மூலம் நன்கொடை வழங்க “Donations” என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

2020 ஆம் ஆண்டின் ரமலானில் “10 மில்லியன் உணவுகள்” என்ற பிரச்சாரமும், 2021 இல் ‘100 மில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரமும் நடத்தப்பட்டு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள 20 நாடுகளில் பலருக்கு உணவு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கடந்த பிரச்சாரங்களின் வெற்றியை அடிப்படையாகக் கொண்ட இந்த ‘1 பில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரமும் முக்கிய மைல்கல்லை எட்டி பல்லாயிரக்கணக்கானோரின் உணவு தேவையை நீக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Related Articles

Back to top button
error: Content is protected !!