அமீரக செய்திகள்

துபாயில் அதிகரிக்கும் மக்கள்தொகை.. அடுத்த ஆண்டிற்குள் புதிதாக அமைக்கப்படவுள்ள 30 பூங்காக்கள்..!!

துபாய் ஆடம்பர ஷாப்பிங், வானளாவிய கட்டிடங்கள், செயற்கை தீவுகள், எண்ணற்ற பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றிற்கு பிரபலமான நகரமாகும். இதனாலேயே துபாய் ஆண்டு முழுவதும் அதிக எண்ணிகையிலான சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்த்து வருகிறது.

இப்படியான நிலையில், துபாயில் அடுத்த ஆண்டிற்குள் 30க்கும் மேற்பட்ட புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், அவற்றில் சில பெரிய மெகா பூங்காக்களாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் துறையின் தலைவர் அகமது இப்ராஹிம் அல்ஜரோனி கூறுகையில், இந்தப் பூங்காக்கள் மெகா பூங்காக்கள் முதல் சிறியளவிலான பூங்காக்கள் மற்றும் சிறிய விளையாட்டுப் பகுதிகள் போன்ற வரம்பில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று திங்கள்கிழமை துபாய் உலக வர்த்தக மையத்தில் (Dubai World Trade Centre) தொடங்கிய அரேபியன் டிராவல் மார்ட்டின் (Arabian Travel Mart -ATM) முதல் நாளில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், பூங்காக்கள் கட்டப்படும் இருப்பிடங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

சுமார் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலுமிருந்து பயண மற்றும் சுற்றுலா துறை வல்லுனர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படவிருக்கும் பூங்காக்களின் எண்ணிக்கையுடன், அவற்றில் வரவிருக்கும் புதிய பசுமையான பகுதிகளின் வடிவமைப்புகள் பற்றிய சில விவரங்களையும் அல்ஜரோனி வெளிப்படுத்தியுள்ளார்.

எமிரேட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பூங்காக்கள், புதிய தலைமுறை வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறிய அவர், “அல் நஹ்தா, குசைஸ் மற்றும் அல் வர்கா ஆகிய இடங்களில் நாங்கள் திறந்த புதிய தலைமுறை பூங்காக்களை பார்த்திருந்தால் உங்களுக்குத் தெரியும், இந்த பூங்காக்கள் மிகவும் நேர்த்தியான வடிவமைப்புகள் மற்றும் அதிக விளையாட்டுப் பகுதிகளைக் கொண்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

துபாய் முழுவதும் 190 க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்கள் பார்பிக்யூ பகுதிகள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு மைதானங்கள் போன்ற பல வசதிகள் மற்றும் சேவைகளை உள்ளடக்கியது.

அதிகரிக்கும் பூங்காக்களின் எண்ணிக்கை:

துபாயில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இன்னும் மூன்று ஆண்டுகளில் எமிரேட்டில் திறக்கப்படும் பூங்காக்களின் எண்ணிக்கை 70ஐத் தாண்டும் என்று அல்ஜரோனி மேலும் கூறியுள்ளார்.

துபாய் 2040 நகர்ப்புற மாஸ்டர் திட்டத்தின் படி, பொழுதுபோக்கு பகுதிகள் மற்றும் பூங்காக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பகுதிகள் இரட்டிப்பாகும் என்றும் இவை வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு சேவை செய்யும் மற்றும் சேவை பகுதிகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பணியிடங்களை இணைக்கும் பசுமை வழிச்சாலையாக செயல்படும் என்பதும் தெரிய வந்துள்ளது.

எல்லா பூங்காக்களும் குழந்தைகள் விளையாடும் பகுதிகள் மற்றும் குடும்பத் தேவைகளைக் கொண்டு உருவாக்கப்படவில்லை என்று கூறிய அல்ஜரோனி, ஒவ்வொரு பூங்காவும் குடியிருப்பாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியிருப்பதாவது: “அந்தப் பகுதியில் உள்ள மக்களின் மக்கள்தொகையைக் கண்டறிய நாங்கள் ஆய்வு செய்கிறோம். அதன்பிறகு அங்குள்ள பெரும்பான்மையினருக்கு பயனளிக்கும் வகையில் பூங்காவை வடிவமைக்கிறோம். சில பகுதிகளில் கிரிக்கெட் விளையாடும் ஆண்களை அதிகம் பார்ப்பதால், அங்கு கிரிக்கெட் மைதானம் அமைப்போம். சில இடங்களில் கூடைப்பந்து விளையாடுபவர்கள் இருப்பதால், நாங்கள் கூடைப்பந்து மைதானத்தையும் சேர்க்கிறோம். ஒவ்வொரு பூங்காவும் அதன் சமூகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று விவரித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!