அமீரகத்தில் பயன்பாட்டிற்கு வந்த “இந்திய டெபிட் கார்டு’..!! 10 மில்லியன் மாஸ்டர்கார்டு, விசா கார்டுகளை மாற்றவிருக்கும் அமீரக வங்கிகள்..!!
இந்தியாவின் அதிகாரப்பூர்வ வங்கிப் பரிவர்த்தனை முறையான Rupay, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீரகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது Rupay வின் கீழ் செயல்படும் ஜெய்வான் டெபிட் கார்டுகளை (Jaywan debit cards) அமீரகத்தில் உள்ள வங்கிகள் வெளியிடத் தொடங்கியுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது அமீரக சந்தையில் புழக்கத்தில் உள்ள 10 மில்லியனுக்கும் அதிகமான டெபிட் கார்டுகள் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் படிப்படியாக மாற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் ஏற்கனவே சந்தையில் இருக்கும் மாஸ்டர்கார்டு மற்றும் விசா ஆகியவற்றின் டெபிட் கார்டுகளுக்கு பதிலாக இந்தியாவின் ஜெய்வான் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கும் என தெரிகிறது.
இது குறித்து UAE வங்கிகள் கூட்டமைப்பின் (UAE Banks Federation -UBF) தலைவர் அப்துல்அஜிஸ் அல்-குரைர் என்பவர் ஊடகங்களிடம் பேசுகையில், அமீரக வங்கிகள் ஜெய்வான் கார்டை விரைவில் வழங்கத் தொடங்கும். எங்களிடம் 10 மில்லியனுக்கும் அதிகமான கார்டுகள் புழக்கத்தில் உள்ளன, எனவே இந்த கார்டுகளை மாற்றுவதற்கு நேரம் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், மற்ற பிராண்டட் டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நிறுத்தி, இரண்டரை ஆண்டுகள் வரை ஜெய்வான் டெபிட் கார்டுகளை உள்நாட்டில் வழங்குவதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, செய்திகளில் வெளியான அறிக்கைகளின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜெய்வான் என்ற டெபிட் கார்டுகளை அமீரக வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கும் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக முன்னதாக ஊடகங்களிடம் பேசியிருந்த அல் எதிஹாத் பேமென்ட்ஸின் (AEP) தலைமை இயக்க அதிகாரி ஆண்ட்ரூ மெக்கார்மேக், நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் டெபிட் கார்டுகளை வழங்கத் தயாராக இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளர்களுடன் ஜெய்வான் டெபிட் கார்டின் விநியோகத்தை தொடங்குவதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அடுத்த சில ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஜெய்வான் டெபிட் கார்டுகளை வழங்குமாறு அமீரகத்தின் மத்திய வங்கி கட்டாயப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல், ஜெய்வானை ஏற்கனவே நிதி பரிமாற்ற சந்தையில் உள்ள மாஸ்டர்கார்டு அல்லது விசா கார்டுகளுடன் இணை-பேட்ஜ் செய்யலாம் என்று மெக்கார்மேக் கூறினார். இதனால், ஜெய்வான் டெபிட் கார்டின் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனையானது UAE, GCC மற்றும் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆகவே, இனி அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களும், இந்தியாவுக்கு வரும் எமிராட்டிகளும் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். அதேபோல், இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கும், அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கும் எளிதாக பணம் அனுப்பவும் முடியும்.
கடந்த பிர்ப்ரவரி மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இந்தியாவின் அதிகாரப்பூர்வ பரிவர்த்தனை முறையான Rupay அமீரகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. ஜெய்வான் இந்தியாவின் RuPay.16 இன் அடித்தளத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel