அமீரகத்தின் மிக உயரமான ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு விரைவில் ‘ஏர் டாக்ஸி’ சேவை.. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ராஸ் அல் கைமா..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுப் போக்குவரத்து வசதிகளில் ஏர் டாக்ஸி சேவைகளை அறிமுகம் செய்ய அனைத்து எமிரட்களும் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ராஸ் அல் கைமாவிலும் கூடிய விரைவில் ஏர் டாக்ஸி சேவைகள் தொடங்கப்படும் என்று ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் (RAKTA) மற்றும் ராஸ் அல் கைமா சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் இணைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அமீரகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரேபிய பயண சந்தையில் கலந்து கொண்டு பேசிய ராஸ் அல் கைமா போக்குவரத்து அதிகாரிகள் இதனை அறிவித்ததுடன், இதற்காக வெர்டிபோர்ட் உள்கட்டமைப்பின் டெவலப்பரான Skyports நிறுவனத்துடன் கூட்டாண்மையில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, ராஸ் அல் கைமா முழுவதும் உள்ள முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் வெர்டிபோர்ட் நெட்வொர்க்கை உருவாக்குவதற்காக இரண்டு ஆணையங்களும் Skyports என்ற பிரிட்டிஷ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், RAKTA, RAKTDA மற்றும் Skyports ஆகியவை இணைந்து ராஸ் அல் கைமாவின் முதல் (eVTOL) ஏர் டாக்ஸியை வடிவமைத்து, மேம்படுத்தி, இயக்கும் என்றும், செயல்பாடுகள் 2027 க்குள் தொடங்கப்படும் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தத் திட்டம் ஸ்கைபோர்ட்ஸின் வெர்டிபோர்ட்களை RAKTA இன் தற்போதைய போக்குவரத்து நெட்வொர்க்குடன் ஒருங்கிணைத்து, அல் மர்ஜான் தீவு, அல் ஹம்ரா மற்றும் நாட்டின் மிக உயரமான ஜெபல் ஜெய்ஸ் மலைத்தொடர் உள்ளிட்ட ராஸ் அல் கைமாவின் மிகவும் பிரபலமான பகுதிகள் மற்றும் ஈர்ப்புகளுக்கு விரைவான போக்குவரத்தை வழங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதனால் இந்தப் பகுதிகளுக்கான பயண நேரம் கணிசமாகக் குறைக்கப்படும் என கூறப்படுகிறது. உதாரணமாக, அல் மர்ஜான் தீவில் இருந்து ஜெபல் ஜெய்ஸுக்கு காரில் பயணம் செய்ய சுமார் 70 நிமிடங்கள் ஆகும். ஆனால், ஏர் டாக்ஸி சேவைகள் தொடங்கப்பட்டால் பயண நேரம் 20 நிமிடங்களுக்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், RAK சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் CEO ராக்கி பிலிப்ஸ் கூறுகையில், “அடுத்த இரண்டு ஆண்டுகளில், ராஸ் அல் கைமாவை சுற்றுலாப் பயணிகள் எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதை மறுவரையறை செய்யக்கூடிய, மின்சாரத்தில் இயங்கும் போக்குவரத்து அமைப்புக்கான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை உருவாக்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தொடர்ந்து பேசுகையில், ஏர் டாக்ஸியை அறிமுகப்படுத்துவதன் மூலம், ராஸ் அல் கைமாவின் ஈர்ப்புகளுக்கான அணுகலை மேம்படுத்துவதுடன் கார்பன் தடயத்தையும் கணிசமாகக் குறைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை இயக்கும் எமிரேட்டின் நோக்கத்திற்கு இந்த வெர்டிபோர்ட் நெட்வொர்க் ஆதரவாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காடியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய RAKTA இன் டைரக்டர் ஜெனரல் இஸ்மாயில் ஹாசன் அல் ப்ளூஷி, எமிரேட்டில் ஏர் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலம், சுற்றுலாப் பயணிகளை எமிரேட்டின் முக்கிய ஈர்ப்புகளுடன் இணைப்பது மட்டுமின்றி, எமிரேட்டுக்கு ஒரு நிலையான பாதையை உருவாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையில், துபாய் மற்றும் அபுதாபியில் ஏர் டாக்ஸி சேவையைத் தொடங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகி விட்டது. மேலும், இதற்கான சோதனை கட்டம் வெற்றிகரமாக முடிந்ததுடன், வரும் 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஏர் டாக்ஸி சேவை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வரிசையில் மூன்றாவது எமிரேட்டாக ராஸ் அல் கைமாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel