அமீரக செய்திகள்

UAE: மழையில் சேதமடைந்த கார், வீடு போன்ற சொத்துகளுக்கு காப்பீடு கிடைக்குமா? எளிதாக காப்பீடைப் பெற என்ன செய்வது..?

ஐக்கிய அரபு அமீரகத்தின் பரவலான பகுதிகளில் சில நாட்களாக பெய்த பலத்த காற்றுடன் கூடிய கனமழை, கார்கள் மற்றும் கட்டிடங்கள் போன்ற சொத்துகளை சேதப்படுத்தியுள்ளது. இந்த வானிலையின் போது சமூக ஊடகங்களில் பகிர்ந்த வீடியோவில், மழையின் போது வாகனங்கள் மீது மரங்கள் விழுந்து காரின் கண்ணாடியை சேதப்படுத்தியதைக் காணலாம்.

அதுபோல, அதிவேகக் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக கார் கண்ணாடிகள் மற்றும் சில கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்த காட்சிகளையும் காண முடிகிறது. இத்தகைய நிலையற்ற வானிலை வாகனங்களுக்கு ஏற்படுத்திய சேதத்திற்கு காப்பீடு (insurance) பெற முடியுமா என்று பல குடியிருப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், மழையின் போது தாழ்வான மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் பொதுவாக இயந்திரங்களுக்கு ஏற்படும் சேதங்கள் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்களால் ஈடுசெய்யப்படாது.

இருப்பினும், கனமழையால் வாகனங்கள் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ நீரில் மூழ்கி சேதமடைந்தால், கார் உரிமையாளர்கள் காப்பீட்டைப் பெறலாம் என்று காப்பீட்டுத் துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கனமழை அல்லது வெள்ளம் நிறைந்த சாலையில் சிக்கிக் கொள்வது, இழுத்துச் செல்லப்படுவது போன்ற சூழல்களுக்கு இந்த காப்பீடுகள் கைக்கு வரும் என்பதால், சாலை உதவி மற்றும் பிற வசதிகளை உள்ளடக்கிய விரிவான காப்பீட்டுக் கொள்கைகளை வாங்குமாறு வாகன ஓட்டிகளை தொழில்துறை நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதுபோல, தனிநபர் தேர்ந்தெடுக்கும் பேக்கேஜ்களைப் பொறுத்து, பெரும்பாலான வீட்டு இன்சூரன்ஸ் பாலிசிகள் மழையினால் ஏற்படும் சேதங்களை ஈடுசெய்யும் என்றும் காப்பீட்டாளர்கள் கூறியுள்ளனர். ஆகையால், இது குடியிருப்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் வீட்டின் மற்ற உள்ளடக்கங்களை பாதுகாக்கும் என்பதால், வீட்டுக் காப்பீட்டைப் பெறுவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

சில நாட்கள் பெய்த மழைக்குப் பிறகு, காப்பீட்டு நிறுவனங்கள் குடியிருப்பாளர்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெறத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. காப்பீட்டுத் தரகுகள் மற்றும் நிறுவனங்கள், சேதங்களைப் பொறுத்து, காப்பீட்டாளர்களின் உரிமைகோரல்களைத் தீர்க்க சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஷார்ஜாவில் சமீபத்திய கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வாகனங்கள் சேதமடைந்த நிலையில், ‘Sharjah Police’ ஸ்மார்ட் ஆப் மூலம் ‘யார் சான்றிதழைப் பெறலாம்’ என்று அறிவித்துள்ளது.

இந்தச் சான்றிதழானது, மோசமான வானிலையின் போது, வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்தும். ஆகவே, உரிமையாளர்கள் இந்த சான்றிதழைப் பெற வேண்டுமெனில், ஷார்ஜா போலீஸ் ஆப் உள்ளே நுழைந்து, “Police Services” என்ற ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர், “To Whom It May Concern Certificate” என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

இதில் வாகன உரிமை மற்றும் காப்பீட்டுத் தகவல்களுடன் சேதம், சம்பவ இடம், தேதி மற்றும் சேதத்தின் புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட்டதும், பரிவர்த்தனை எண் அடங்கிய இ-மெயிலைப் பெறுவீர்கள்.

எனவே, குடியிருப்பாளர்கள் இது போன்ற சேதங்களுக்கு எளிதாகக் காப்பீட்டைப் பெற இந்த ஸ்மார்ட் ஆப்-ஐ பயன்படுத்துமாறு ஷார்ஜா காவல்துறையினரால் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!