அமீரக செய்திகள்

UAE: விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடினால் 20,000 திர்ஹம் அபராதம் மற்றும் சிறைதண்டனை..!! அதிகாரிகள் எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலை விபத்தில் சிக்கிய பின்னர், விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்லக் கூடாது. அவ்வாறு விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச்சென்றால் சிறைத்தண்டனை உட்பட 20,000 திர்ஹம் அபராதம் மற்றும் பல சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பொதுவாக, விபத்து நடந்த இடத்தில் துபாய் காவல்துறையின் விபத்து விசாரணை நிபுணர்கள், உயர் தொழில்நுட்ப அமைப்பைப் பயன்படுத்தி விபத்துகளுக்கான காரணங்களைக் கண்டறிவதுடன் குற்றவாளிகளைக் கண்காணிக்கவும் செய்வார்கள்.

இவ்வாறு விபத்துக்கு காரணமான போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, துபாய் காவல்துறை தலைமையகத்தில் உள்ள போக்குவரத்து விபத்து ஆய்வாளர்கள் விபத்துக்களுக்கான காரணங்களைக் கண்டறிய அதிக பயிற்சி பெற்ற துப்பறிவாளர்களைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் விபத்தானது எதேர்ச்சியாக ஏற்பட்டதா அல்லது வேண்டுமென்றே செய்த செயலா என கண்டுபிடிக்கப்படும்.

மேலும், பர் துபாய் காவல் நிலையத்தின் திறமையான போக்குவரத்து விபத்து புலனாய்வாளர்கள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த முன்னர் தீர்க்கப்படாத போக்குவரத்து விபத்து வழக்குகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது அவர்களின் சிறந்த பயிற்சி மற்றும் நிபுணத்துவத்தின் மூலமும், குற்றப் புலனாய்வு பொது இயக்குநரகம், போக்குவரத்து பொது இயக்குநரகம், பொது செயல்பாட்டுத் துறை, தடயவியல் சான்றுகள் மற்றும் குற்றவியல் பொதுத் துறை மற்றும் துபாயில் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் போன்ற பல்வேறு முக்கிய துறைகளுடன் தடையின்றி ஒத்துழைத்ததன் மூலம் சாத்தியமானதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரியின் வழிகாட்டுதலின் கீழ், குற்றப் புலனாய்வு விவகாரங்களுக்கான உதவித் தளபதி மேஜர் ஜெனரல் கலீல் இப்ராஹிம் அல் மன்சூரியின் மேற்பார்வையின் கீழ், பர் துபாய் காவல்நிலையத்தின் இயக்குனர் பிரிகேடியர் அப்துல்லா காடெம் சொரூர், தங்கள் பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மையத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு, இந்த மையம் தெரியாத போக்குவரத்து விபத்துகளுக்கு 100% தீர்வு விகிதத்தை எட்டியுள்ளது. இந்த சாதனையானது, அதிநவீன AI மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து போக்குவரத்து விபத்து விசாரணைகளில் நிபுணத்துவம் பெற்ற உயர் பயிற்சி பெற்ற பணியாளர்களின் கலவையான முயற்சி மூலம் சாத்தியமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத சடலம்:

சாலை விபத்தில் மரணித்தவரின் அடையாளம் காண்பது ஒரு முக்கிய நிகழ்வு. இதுபோன்ற வழக்குகளில் விசாரணைகளை நடத்தும் பர் துபாய் காவல் நிலையத்தில் போக்குவரத்துப் பதிவுத் துறையின் தலைவராகப் பணியாற்றும் கேப்டன் அஹ்மத் கல்பான் பின் லஹேஜ் என்பவர் ஒரு குறிப்பிட்ட விபத்து குறித்து தெரிவிக்கையில், சாலையில் சென்று கொண்டிருந்த செடான் கார் ஒன்று, திடீரென பக்கத்து பாதையில் பயணித்த லாரி மீது மோதியதில் கார் சுமார் 100 மீட்டர் முன்னோக்கிச் சென்று தீப்பிடித்து எரிந்ததாகவும், மிகப்பெரிய தீ வாகனத்தை விழுங்கியதால் ஓட்டுநர் இறந்ததாகவும் கூறியுள்ளார்.

கேப்டன் பின் லஹேஜ் மேலும் கூறுகையில், இந்த விபத்தில் இறந்த ஓட்டுநரின் அடையாளத்தை கண்டுபிடிப்பது சிக்கலாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து விசாரணைக் குழு விபத்து நடந்த இடத்தை உன்னிப்பாக ஆய்வு செய்ததில், 70 மீட்டர் தொலைவில் கிடந்த காகிதத்தை அடையாளம் கண்டதாகவும், அது ஒரு சுகாதாரம் தொடர்பான அரசு நிறுவனத்திற்குக் காரணமான தாள் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய கேப்டன் பின், ஒரு வழியாக அந்த காகிதத்தின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டு, அவரைப் பற்றி விசாரணை செய்ய முயற்சித்த போது, அவர் இன்னும் உயிருடன் இருந்தார் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாய் இருந்தது, இங்குதான் ஒரு முக்கியத் திருப்புமுனை உள்ளது. விபத்தில் இறந்தவர் காரின் உரிமையாளரின் நண்பர் என்பதும், அவர் வாகனத்தை தேவைக்காக கடன் வாங்கியதும் தெரியவந்தது என்றும் கூறினார்.

இதேபோல, அடையாளம் தெரியாத மற்றொரு சாலை விபத்தில், அடையாளம் தெரியாத கார் ஓட்டுநர் சிக்னலை மீறி சென்று, ஸ்கூட்டரில் சென்றவரைத் தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றிருக்கிறார், அந்த நபரைக் கண்டுபிடிக்கும் சவாலை பர் துபாய் காவல் நிலையம் எதிர்கொண்டதாக கேப்டன் பின் லஹேஜ் விவரித்துள்ளார்.

இந்த வழக்கில், சம்பவ இடத்திலிருந்து 2.8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பார்க்கிங்கில் அந்த கார் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், தடயவியல் நிபுணர்கள் மூலம் கைரேகைகளை சேகரித்து, விசாரணை செய்ததில் பெண் ஒருவருடன் ஓட்டுநர், காரை வாடகைக்கு எடுத்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு, பின்னர் டாக்ஸியில் தப்பிச் சென்றது தெரியவந்ததாகவும் கேப்டன் பின் லஹேஜ் தெரிவித்துள்ளார். இறுதியாக குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கூறிய அடையாளம் தெரியாத விபத்துகள் போல, நிறைய சிக்கலான வழக்குகலைத் தீர்ப்பதிலும், பாதுகாப்பை மேம்படுத்துவதிலும், துபாயின் சாலைகளில் சட்டத்தை நிலைநாட்டுவதிலும் பர் துபாய் காவல் நிலையத்தின் போக்குவரத்து விபத்து ஆய்வாளர்களின் இன்றியமையாத அர்ப்பணிப்பும் பங்களிப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!