அமீரக செய்திகள்

அமீரகத்தில் பிராண்டுகளின் பெயரில் போலியான பொருட்களை விற்பனை செய்ய தடை.. மீறினால் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆண்டுதோறும் உலகளவில் பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அமீரகம் முக்கிய வர்த்தக மையங்களாக இருக்கும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

பொதுவாக, இது போன்ற உலகளாவிய வர்த்தகங்களில் ஈடுபடும் நாடுகளில் போலியான தயாரிப்புகள் அல்லது கள்ளச் சரக்குகளைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில், அத்தகைய போலியான பொருட்கள் எதுவும் நாட்டின் எல்லைகள் வழியாக கடத்தப்படாமல் இருக்க அமீரக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

அந்த சட்டத்தின் படி, பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையை பொதுமக்களை குழப்பும் வகையில் போலியாக உருவாக்கி, போலியான பொருட்கள் அல்லது சேவைகளை அமீரகத்திற்குள் கொண்டு வருதல் அல்லது விற்றல் போன்ற நடவடிக்கைகளுக்கு சிறைத்தண்டனை மற்றும் 100,000 திர்ஹம்களுக்குக் குறையாத மற்றும் 1 மில்லியன் திர்ஹம்களுக்கு மிகாமல் அபராதம் அல்லது இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, போலியான சரக்குகளின் சந்தை மதிப்பு $2-3 டிரில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை பெருமளவில் பாதிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அமீரகத்தில் ஏதேனும் போலியான சரக்குகள் பயன்பாடு அல்லது விற்பனை செய்வது பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனடியாக உள்துறை அமைச்சகத்தின் பொருளாதார குற்றப் பிரிவுக்கு புகாரளிப்பது குடியிருப்பாளர்களின் தார்மீகப் பொறுப்பு என்று கூறப்படுகிறது.

புகார் கிடைத்ததும் இதுபோன்ற போலியான பொருட்கள் மிகப்பெரிய கிடங்குகள் அல்லது கன்டெய்னர்களில் அதிக அளவு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அந்தப் பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு, மாற்றுக் கிடங்குக்கு மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களின் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் அகற்றல் தொடர்பான எந்தவொரு செலவையும் குற்றம் சாட்டப்பட்டவரே ஏற்க வேண்டும். இறுதியாக, குற்றவியல் தீர்ப்பு முடிவு செய்யப்பட்டவுடன் சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கும் சேதங்களுக்கு இழப்பீடு கோருவதற்கும் புகார்தாரர்களுக்கு உரிமை உண்டு. இத்தகைய சேதங்களை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் சில சமயங்களில் மதிப்பிடுவார் என கூறப்படுகின்றது.

மேலும், போலியானப் பொருட்களை வைத்திருத்தல் அல்லது விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கு அபராதம், பறிமுதல் செய்தல், போலியான பொருட்களை அழித்தல், சிறைத்தண்டனை மற்றும் நாடு கடத்தல் உள்ளிட்ட தண்டனைகள் நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு ஏற்ப விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் வணிக நோக்கங்களுக்காக போலியான பொருட்கள் அல்லது போலியான வர்த்தக முத்திரையை தெரிந்தே பயன்படுத்தியதற்காகவும், போலியான வர்த்தக முத்திரையைக் கொண்ட பொருட்களை தெரிந்தே இறக்குமதி செய்த அல்லது ஏற்றுமதி செய்ததற்காகவும் அபராதம் விதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!