UAE: ஓவர்டேக் செய்யும் வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றால் இனி அபராதம்..!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!!

அமீரக சாலை மற்றும் போக்குவரத்து விதிகளின் படி, சாலைகளில் முந்திச்செல்ல முயற்சிக்கும் வாகனங்கள் எப்போதும் இடது பாதையில்தான் செல்ல வேண்டும். அவ்வாறு அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் செல்வதற்கு இடப்புறத்தில் வழிவிடாமல் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.
அதாவது, மெதுவான வேகத்தில் செல்லும் போது, அதற்கான சரியான பாதையில் ஓட்டுமாறு காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் ஓட்டுனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
குறிப்பாக அதிவேக வாகனங்கள் செல்லும் இடப்புற பாதைக்கு அருகில் வாகனம் ஓட்டுவதும், அதிக பீம்களை அடித்தும், ஹன் அடிப்பதும், வாகன ஓட்டிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதால் விபத்துகள் ஏற்படுவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
விதிமீறல்களுக்கான சட்ட நடவடிக்கைகள்:
சாலைகளில் வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்காதது போக்குவரத்து விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, 2020 ஆம் ஆண்டின் 5 ஆம் எண் சட்டத்தின் படி, அபுதாபி எமிரேட்டில் போதிய பாதுகாப்பு தூரத்தை பின்பற்றாத ஓட்டுநரின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, வாகனத்தை விடுவிக்க 5,000 திர்ஹம் கட்டணமும் விதிக்கப்படும்.
மேலும், உரிமையாளர் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் இந்தத் தொகையை செலுத்தி வாகனத்தை மீட்டெடுக்க வேண்டும். இல்லையெனில், வாகனம் பொது ஏலத்தில் விற்பனைக்கு பரிந்துரைக்கப்படும். கூடுதலாக, 400 திர்ஹம் அபராதம் மற்றும் ஓட்டுநரின் போக்குவரத்து கோப்பில் நான்கு ப்ளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.