துபாய்-ஷார்ஜா இடையிலான முக்கிய சாலையில் வேகவரம்பு மாற்றம்..!! நவம்பர் 20 முதல் அமலுக்கு வரும் என RTA அறிக்கை….

துபாய், ஷார்ஜா இடையே செல்லும் முக்கிய சாலையான அல் இத்திஹாத் சாலையின் ஒரு முக்கிய பகுதியில் வேகவரம்பு அதிகாரிகளால் குறைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, எதிர்வரும் நவம்பர் 20 முதல், ஷார்ஜா மற்றும் அல் கர்ஹவுத் பிரிட்ஜ் (Al Garhoud Bridge) இடையேயான வேக வரம்பு மணிக்கு 100 கிமீ வேகத்தில் இருந்து 80 கிமீ ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில், நுழைவாயில்கள் மற்றும் எக்சிட்களின் எண்ணிக்கை, இன்டர்செக்சன்களின் நிலைமை, போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் சமீபத்திய மேம்பாடுகள் ஆகியவற்றை சமீபத்திய ஆய்வில் மதிப்பாய்வு செய்த பிறகு, துபாய் காவல்துறையுடன் இணைந்து இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், புதிதாக மாற்றப்பட்டுள்ள அதிகபட்ச வேக வரம்பை பிரதிபலிக்கும் வகையில் அல் இத்திஹாத் சாலையில் உள்ள போக்குவரத்து அடையாளங்கள் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேக குறைப்பானது அபு ஹைல் பகுதியில் இருந்து ஏர்போர்ட் செல்லும் எக்ஸிட் எடுக்கும் நபர்களுக்கு வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, போக்குவரத்து பாதுகாப்பு தரநிலைகளின்படி சிவப்பு கோடுகள் வேகக் குறைப்பு மண்டலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்று RTA தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel