துபாய்: வாகனங்கள் இன்றி மக்களால் நிரம்பி வழிய காத்திருக்கும் ஷேக் சையத் சாலை..!! இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கும் துபாய் ரன் நிகழ்வையொட்டி ஏற்பாடு….
ஐக்கிய அரபு அமீரகத்தின் பரபரப்பான நெடுஞ்சாலையான ஷேக் சையத் சாலையில் இந்த வார இறுதியில் துபாய் ரன் நடைபெற உள்ளதால், சாலை வாகனங்கள் இன்றி காலியாகத் தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் (DFC) இறுதிப்பகுதியாக துபாய் ரன் நடைபெறவுள்ளது. துபாய் காவல்துறையின் சூப்பர் கார் அணிவகுப்புடன் இந்த மாபெரும் ஓட்டப்பந்தயம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் அதிகளவு வாகனங்களை எதிர்கொள்ளும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த சாலை இருப்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் ரன் நிகழ்வைப் பொறுத்தவரை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) நடைபெறும் இலவச ஓட்டப்பந்தயத்தில் வயது மற்றும் திறனைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால், துபாயின் பிரதான சாலையான ஷேக் சையத் சாலை ஓட்டப்பந்தய வீரர்களால் ஆக்கிரமிக்கப்படும்.
மேலும், ஷேக் சயீத் சாலையில் தொடங்கும் துபாய் ரன்னில் பங்கேற்பவர்கள் இரண்டு வெவ்வேறு வழிகளைத் தேர்வுசெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. முதலாவது, துபாய் ஓபரா, துபாய் மால் மற்றும் புர்ஜ் கலீஃபா உள்ளிட்ட துபாயின் ஐகானிக் அடையாளங்களை கடந்து செல்லும் 5-கிமீ டவுன்டவுன் குடும்பப் பாதை (Family route) மற்றும் இரண்டாவது ஷேக் சயீத் சாலையில் இருந்து துபாய் கேனல் வரை நீண்டு பின்னோக்கிச் சென்று துபாய் இன்டர்நேஷனல் ஃபினான்சியல் சென்டர் (DIFC) அருகில் உள்ள அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட்டில் முடிவடையும் 10-கிமீ ஷேக் சயீத் சாலைப் பாதையை உள்ளடக்கியதாகும்.
அதாவது, குடும்பப் பாதையானது, குடும்பங்கள் மற்றும் அனைத்து நிலைகளிலும் உள்ள ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஏற்றது. ஆனால், இரண்டாவது பாதை அதிக அனுபவம் வாய்ந்த ஓட்டப்பந்தய வீரர்களுக்கு மட்டுமே ஏற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இரண்டு வழிகளுக்கும் பதிவு இலவசமாகும். பங்கேற்பாளர்கள் இணையதளத்தில் பதிவு செய்து தங்களுக்கு விருப்பமான வழியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்கள் இடத்தைப் பாதுகாக்க முடியும்.
ஒருமுறை சைன்-அப் (sign up) செய்தவுடன், பிப்களை (bib) சேகரிப்பதற்கு அவசியமான QR குறியீடு வழங்கப்படும். பார்வையாளர்கள் ‘Sun & Sand Sports’ வழங்கும் தங்களின் பிப்கள் (bibs) மற்றும் டி-ஷர்ட்களை, ஒன் சென்ட்ரலில் அமைந்துள்ள DFCயின் புதிய ரன் மற்றும் ரைடு சென்ட்ரலில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். பிப்கள் இல்லாதவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
‘Mai Dubai ‘ வழங்கும் துபாய் ரன் 2023 நிகழ்வு முன்னெப்போதையும் விட பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இதே போல் நடைபெற்ற துபாய் ரன்னில் 193,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel