ADVERTISEMENT

UAE-இந்தியா விமானக் கட்டணங்கள் உயர்வு: கோடைக்காலப் பயண நெரிசலால் உயரும் டிக்கெட் விலை!!

Published: 16 Jun 2026, 5:56 PM |
Updated: 16 Jun 2026, 5:56 PM |
Posted By: Menaka

கோடை விடுமுறைக்காலத்தை முன்னிட்டு பயணத் தேவை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சில வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் சாதனை அளவை எட்டியுள்ளதால், இந்த ஆண்டு அமீரகத்தில் வசிப்பவர்கள் இந்தியாவுக்கு கோடைக்காலப் பயணத்தைத் திட்டமிடுவது கணிசமாக அதிக செலவு ஏற்படும் ஒன்றாக மாறவுள்ளது.

ADVERTISEMENT

ஆகஸ்ட் 1 முதல் 31 வரையிலான பயணங்களுக்கான கட்டணங்களை ஆய்வு செய்ததில், இந்திய நகரங்களுக்கான கட்டணங்களில் பெரும் வேறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. சில நகரங்களுக்கான பயணக் கட்டணம் மற்றவற்றை விட பல மடங்கு அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான சமீபத்திய அறிக்கைகளின் படி, அதிக கட்டணம் கொண்ட வழித்தடங்களில் ஹைதராபாத் முதன்மையானதாக உள்ளது. அங்கு ஒரு பயணியின் இருவழிப் பயணக் கட்டணம் 9,250 திர்ஹம் வரை உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக டெல்லிக்கு 9,090 திர்ஹம் மற்றும் கொச்சிக்கு 7,800 திர்ஹம் வரை கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

ADVERTISEMENT

இந்த விலையின் அடிப்படையில், மதிப்பிடும் போது, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, விமானப் பயணத்திற்கு மட்டும் ஏறக்குறைய 37,000 திர்ஹம் வரை செலவாகக்கூடும்.

இதற்கு நேர்மாறாக, சில இடங்களுக்கான பயணக் கட்டணங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. குறிப்பிட்ட விமான நிறுவனங்களில் சென்னைக்கான கட்டணம் 1,678 திர்ஹம் முதல் கிடைக்கின்றன. இதனால் குறைந்த கட்டண விமான சேவைகளைப் பயன்படுத்தி குடும்பங்கள் 5,000 திர்ஹமுக்கும் குறைவான செலவில் பயணிக்க முடிகிறது.

ADVERTISEMENT

கோடைக்காலத்திற்கான அதிக தேவை, பள்ளி விடுமுறைகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான இருக்கை வசதி ஆகியவையே இந்தக் கட்டண உயர்வுக்குக் காரணம் என்று பயணத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“சமீப காலங்களில் நாங்கள் கண்ட மிக உயர்ந்த கட்டண நிலைகளில் இதுவும் ஒன்றாகும்” என்று ‘வைஸ்ஃபாக்ஸ் டூரிசம்’ (Wisefox Tourism) நிறுவனத்தின் மூத்த மேலாளர் சுபைர் தேகப்புரத்வளப்பில் கூறியுள்ளார். ஜூன் மாத இறுதி மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான பல விமானங்கள் ஏற்கனவே முழுமையாக நிரம்பும் நிலையில் இருப்பதாகவும், குறிப்பாக விடுமுறைக்காலத்தில் அதிக தேவை நிலவும் தென்னிந்திய வழித்தடங்களில் இந்த நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கடுமையாக அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்க, சில பயணிகள் மாற்றுப் பயண வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். உதாரணமாக, கேரளாவுக்குச் செல்லும் பயணிகள் முதலில் மும்பைக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து உள்நாட்டு விமானம் மூலம் செல்ல பரிசீலிப்பதாகத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வழியில் பயண நேரம் சற்று அதிகமாக இருந்தாலும், இந்த உத்தி ஒட்டுமொத்த பயணச் செலவைக் கணிசமாகக் குறைக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

UAE பள்ளிக் விடுமுறைக் காலத்தில் மேற்கொள்ளப்படும் குடும்பப் பயணங்களே முன்பதிவுகளை அதிகரிக்கச் செய்வதாக ‘புளூட்டோ டிராவல்ஸ்’ (Pluto Travels) நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் பாரத் ஐதாசனி கூறியுள்ளார். மேலும், ஆகஸ்ட் மாதப் பயணங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதாகவும், இருக்கைகள் விற்றுத் தீரத் தீர கட்டணங்கள் மேலும் உயரக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆகவே, கோடைக்காலப் பயணப் பருவம் நெருங்கி வருவதால், சிறந்த கட்டணங்களைப் பெறவும் கடைசி நேரத்தில் ஏற்படும் விலை உயர்வைத் தவிர்க்கவும் முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு பயண முகவர்கள் குடியிருப்பாளர்களை அறிவுறுத்துகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel