ஷார்ஜா மற்றும் துபாய் இடையிலான பயணத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு முக்கிய போக்குவரத்துத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவின் ஆட்சியாளரும் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினருமான மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள், இவ்விரு எமிரேட்களையும் இணைக்கும் வகையில் புதிய இருவழித்தட (double-lane) நிலத்தடி சுரங்கப்பாதை அமைப்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ளார்.
இந்தச் சுரங்கப்பாதை ‘அல் தாவூன்’ (Al Taawun) பகுதிக்கு அடியில் அமைக்கப்பட்டு, துபாயின் ‘அல் நஹ்தா’ (Al Nahda) பாலத்துடன் நேரடியாக இணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், தினமும் இவ்விரு எமிரேட்களுக்கு இடையே பயணிக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு விரைவான மற்றும் தடையற்ற போக்குவரத்து வசதி கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டுமானப் பணிகளுக்காக ஷார்ஜாவின் அடையாளமாகத் திகழும் ‘அல் தாவூன்’ வட்டச் சாலை நினைவுச் சின்னம் தற்காலிகமாக அகற்றப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், திட்டம் நிறைவடைந்ததும் அந்த நினைவுச் சின்னம் மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படும் என்று ஷேக் டாக்டர் சுல்தான் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக ஷார்ஜா தொலைக்காட்சியின் ‘டைரக்ட் லைன்’ (Direct Line) நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியாளர், ஷார்ஜா மற்றும் துபாயை இணைக்கும் முக்கிய பாதையாக ‘அல் தாவூன்’ சாலை உருவெடுத்துள்ளதால் இத்திட்டம் அவசியமானதாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
“அல் தாவூன் சாலை ஷார்ஜா மற்றும் துபாயை இணைக்கும் ஒரு முக்கிய பாதையாக மாறியுள்ளது. புதிய நிலத்தடி சுரங்கப்பாதை ‘அல் நஹ்தா’ பாலத்துடன் நேரடி இணைப்பை ஏற்படுத்தி, இவ்விரு அமீரகங்களுக்கும் இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும்,” என்பதையும் அவர் விவரித்துள்ளார்.
இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன் விரிவான பொறியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த ஷேக் டாக்டர் சுல்தான், நிபுணர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, நினைவுச் சின்னத்தின் அடித்தளம் நிலத்தடியில் ஆழமாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டதாகவும், எனவே, அந்த அமைப்பைத் தற்காலிகமாக அகற்றாமல் சுரங்கப்பாதையைக் கட்டுவது சாத்தியமற்றது என்பது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இப்போது பொறியாளர்கள் சுரங்கப்பாதையின் நுழைவு மற்றும் வெளியேறும் சாலைகளுக்கான பணிகளைத் தொடங்கவுள்ளனர். அதே நேரத்தில், அந்த நினைவுச் சின்னத்தை தற்போதுள்ள அதே வடிவில் மீண்டும் அமைப்பதற்கான திட்டங்களையும் தயாரித்து வருகின்றனர்.
இத்திட்டம் போக்குவரத்து ஓட்டத்தை கணிசமாக மேம்படுத்தி, ஷார்ஜா மற்றும் துபாய் இடையிலான இணைப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், ஷார்ஜாவின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றையும் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், பயண வசதியை மேம்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்குத் தேவையான வசதிகளைச் செய்தல் ஆகிய நோக்கங்களுடன் ஷார்ஜா உள்கட்டமைப்புத் திட்டங்களில் தொடர்ந்து பெரும் முதலீடுகளைச் செய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்போதைக்கு மக்கள் தங்களுக்குப் பிடித்தமான ‘அல் தாவூன்’ நினைவுச் சின்னத்திற்குத் தற்காலிகமாக விடைபெற வேண்டியிருந்தாலும், அதன் அகற்றம் தற்காலிகமானது மட்டுமே என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். சமீபத்திய அறிவிப்பின் படி, நகரத்தின் பாரம்பரியத்தைப் பாதிக்காத வகையில், மிகவும் திறமையான போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கும் ஒரு பெரிய தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel