அமீரக செய்திகள்

அபுதாபிக்கு ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பஸ்-ஐக் கொண்டு வரும் சீன தொழில்நுட்ப நிறுவனம்!!! ITC யுடன் கையெழுத்தான ஒப்பந்தம்….!!

சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான விஸ்டம் மோட்டார் (Wisdom Motor), சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பூஜ்ஜிய உமிழ்வு நகரப் பேருந்துகளை அபுதாபியில் அறிமுகப்படுத்த உள்ளது.

மேலும் இந்நிறுவனம், Al Fahim குழுமத்தின் ஒரு பகுதியான Emirates Global Motor Electric (EGME) என்ற அதன் விநியோகஸ்தர் மூலம் அபுதாபி எமிரேட்டுக்கு கார்பன் உமிழ்வற்ற போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதற்கு அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்துடன் (ITC) ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த 12 மீட்டர் ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் சிட்டி பஸ் 500 கிமீ ஓட்டும் வரம்பைக் கொண்டுள்ளது மற்றும் 100 கிமீ பயணத்திற்கு 105 கிலோ கார்பன் உமிழ்வைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து 2030 ஆம் ஆண்டுக்குள் அபுதாபி ஐலேண்டை பசுமை மண்டலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியின் அரசு அதிகாரிகள் இத்தகைய மூலோபாய கூட்டாண்மை மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புகள் மூலம் நிலையான எதிர்காலத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். அபுதாபியின் நிலைத்தன்மைக்கான உறுதிப்பாட்டுடன் இணைந்த தொலைநோக்கு முன்முயற்சியான பசுமைப் பேருந்து திட்டத்திற்கான (Green Bus Programme) ITC இன் அறிவிப்புடன் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒத்துப்போகிறது.

இது குறித்து கூறுகையில் “எங்கள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களை அபுதாபிக்கு கொண்டு வர ITCயுடன் கூட்டு சேர்ந்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று கூறிய விஸ்டம் மோட்டரின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் கிளிஃப் ஜாங் அவர்கள், “இந்த கூட்டாண்மை GCC சந்தையில் நுழைவதில் எங்கள் நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க மைல்கல்” என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலைத்தன்மையை நோக்கிய இலக்குகளுக்கு இளம் நிறுவனமாக பங்களிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், பிராந்தியத்தில் நிறுவனத்தை விரிவுபடுத்த எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூஜ்ஜிய உமிழ்வு வாகன வழங்குனரான விஸ்டம் மோட்டாரின் தலைமையகம் சீனாவின் ஹாங்காங்கில் உள்ளது. இந்நிறுவனம் புஜியானில் உள்ள அதன் உற்பத்தி மையத்தில் தொழில்நுட்பம், தனிப்பயனாக்கம் மற்றும் துல்லியமான உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தனிப்பயனாக்கக்கூடிய மற்றும் அதிநவீன வணிக வாகனங்களை வழங்குகிறது.

ஹாங்காங்கில் ஹைட்ரஜனில் இயங்கும் டபுள் டெக்கர் பஸ் மற்றும் ட்ரை-ஆக்சில் டபுள் டெக்கர் பஸ்ஸின் முதல் வழங்குநர் இந்த நிறுவனமே என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!