துபாய்: அல் குசைஸ் பகுதியில் 32 சாலைப் பணிகளை முடித்த RTA..!! மணிக்கு 1,500 வாகனங்கள் செல்லும் என தகவல்..!!
துபாயில் சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்யவும், பயண நேரத்தைக் குறைக்கவும் மற்றும் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும் எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) எமிரேட் முழுவதும் பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் பணிபுரிந்து வருகிறது. அந்த வகையில், RTA இப்போது அல் குசைஸ் தொழில்துறை பகுதிகள் 1, 2, 3, 4, மற்றும் 5 களில் சாலை மேம்பாட்டுப் பணிகளை முடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
RTAவின் படி, மேற்கூறிய பகுதிகளில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்ததுடன், தெரு விளக்குகளில் விரிவான மேம்பாட்டுப் பணிகளையும் முடித்துள்ளது. இந்தத் திட்டத்தில் 10 கிலோமீட்டர்கள் வரை 32 சாலைகள் அமைக்கப்படுவதும், 43,000 மீட்டர் நீளத்தில் தெரு விளக்குகள் நிறுவுவதும் அடங்கும். இதன் விளைவாக, சாலைத் திறன் இப்போது இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 500 முதல் 1,500 வாகனங்கள் வரை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக RTA கூறியுள்ளது.
இது குறித்து RTAவின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரும், இயக்குநர் ஜெனரலுமான மட்டர் அல் தயர் கருத்துத் தெரிவிக்கையில், அல் குசைஸ் தொழில்துறை பகுதிகள் 1, 2, 3, 4 மற்றும் 5 இல் உள்ள உள் சாலைகள் திட்டம் (internal roads project) அம்மான் ஸ்ட்ரீட், பெய்ரூட் ஸ்ட்ரீட், அலெப்போ ஸ்ட்ரீட் மற்றும் டமாஸ்கஸ் ஸ்ட்ரீட் ஆகிய நான்கு முக்கிய வீதிகளுடனான இணைப்பை மேம்படுத்தியுள்ளதாகவும், கூடுதலாக 320 க்கும் மேற்பட்ட அலுவலகங்கள், 25 குடியிருப்பு கட்டிடங்கள், கடைகள் மற்றும் கல்வி வசதிகளுக்கான அணுகல் மற்றும் வெளியேறும் இடங்களை மேம்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
RTA நிறைவு செய்த திட்டங்கள்:
RTA சமீபத்தில் மார்கம், லஹ்பாப், அல் லிசைலி மற்றும் ஹத்தா ஆகிய நான்கு குடியிருப்பு பகுதிகளில் சாலை மற்றும் தெருவிளக்கு திட்டங்களை நிறைவு செய்துள்ளது. அத்துடன் இது 35 கி.மீ தொலைவை உள்ளடக்கியதாகும். மேலும், குடியிருப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக லஹ்பாப் மற்றும் அல் லிசைலியில் கூடுதல் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மார்காம்
மார்காமில், சுமார் 1,100 குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்யும் வகையில், ஸ்கைடைவ் துபாய்க்கு அருகில் துபாய்-அல் அய்ன் சாலையில் 5 கி.மீ நீளத்திற்கு சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதேபோல், லஹ்பாப் 4 கிமீ சாலை மேம்பாடுகளையும், லஹ்பாப் கேமல் ரேசிங் டிராக்குக்கு அருகில் துபாய்-ஹத்தா சாலையில் தெரு விளக்குகள் மேம்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. இதனால் 3,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பயனடைகின்றனர். இந்தத் திட்டம் குடியிருப்பு சமூகத்தை சாலை நெட்வொர்க்குடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அல் லிசைலி
அல் லிசைலியில், சுமார் 7 கிமீ சாலை மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதுமட்டுமில்லாமல், லாஸ்ட் எக்சிட் மற்றும் அல் குத்ரா ஏரிகளுக்கு அருகில் உள்ள ஸெஹ் அல் சலாமில் தற்போதுள்ள சாலைகளில் 7 கி.மீ.க்கு மேல் லைட்டிங் பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மேம்பாடுகள் ஏறக்குறைய 2,900 குடியிருப்பாளர்களுக்குப் பயனளிக்கின்றன மற்றும் அப்பகுதியின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் அணுகலை மேம்படுத்துகின்றன.
ஹத்தா
சுஹைலா பகுதியில் 2 கிலோமீட்டர் சாலையை விரிவுபடுத்துதல், மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் தெரு விளக்குகளை நிறுவுதல் போன்ற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஹத்தா சந்தித்துள்ளது. இந்தத் திட்டமானது ஏறக்குறைய 6,000 குடியிருப்பாளர்களுக்குப் பயனளிக்கிறது, அப்பகுதிக்கான அணுகலை மேம்படுத்துகிறது மற்றும் குடியிருப்பு பகுதிக்கும் சாலை நெட்வொர்க்கிற்கும் இடையேயான இணைப்பை மேம்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel