அமீரக செய்திகள்

ஜூன் 18 முதல் அபுதாபி-திருச்சி இடையே மூன்றாவது விமான சேவையை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!!

இந்தியாவின் பட்ஜெட் கேரியர் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவின் பல நகரங்களுக்கு இடையே பல விமான சேவைகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமான திருச்சி விமான நிலையத்திற்கும் அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையே விமான போக்குவரத்து சேவையையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில், அபுதாபி மற்றும் திருச்சிக்கு இடையே மேலும் ஒரு நேரடி விமான சேவையை வழங்க இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தற்போது வாரத்திற்கு இரண்டு விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், வரும் ஜூன் 18ம் தேதி முதல் வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே அபுதாபியில் இருந்து சென்னைக்கு பல நேரடி விமான சேவைகள் இருந்த போதிலும், அபுதாபியிலிருந்து தமிழகத்தின் மற்ற விமான நிலையங்களுக்கு போதுமான விமான சேவைகள் இல்லை. தற்போது அபுதாபியிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மட்டுமே நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது.

மேலும் இந்த விமான சேவையானது மே 17ம் தேதிக்கு முன்னர் வரையிலும் வாரத்திற்கு ஒரு முறை (ஞாயிற்றுக்கிழமை) மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதனால் அபுதாபியில் வசிக்கக்கூடிய தமிழகத்தின் தென்பகுதிகளை சேர்ந்தவர்கள், மதுரை அல்லது திருச்சிக்கு செல்ல துபாய் அல்லது ஷார்ஜா வழியாகவே பயணிக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. பின்னர் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மே 17 முதல் வெள்ளிக்கிழமையில் கூடுதல் விமான சேவையை அறிவித்தது.

இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்பொழுது அபுதாபி மற்றும் திருச்சி இடையே மேலும் ஒரு கூடுதல் விமான சேவையை அறிவித்திருப்பது தமிழக பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் இந்த கூடுதல் விமான சேவையானது எதிர்வரும் ஜூன் 18ம் தேதி செவ்வாய்கிழமை முதல் இயக்கப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் திருச்சி விமான நிலையத்திற்கும் அபுதாபியின் சையத் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரத்திற்கு மூன்று நாட்கள் நேரடி விமான சேவைகள் பயண்பாட்டில் இருக்கும். இதனால் அபுதாபி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இந்த கூடுதல் விமான சேவைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அத்துடன், இந்த விமானமானது திருச்சியில் இருந்து செவ்வாய்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு அபுதாபியை வந்தடையும். அதன் பின்னர் அபுதாபியிலிருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு திருச்சியை சென்றடையும். மேலும் இந்த கூடுதல் விமான சேவைக்கான டிக்கெட் புக்கிங்கை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது இணையதளத்தில் தொடங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!