இன்று அமீரகத்தின் மிக நீண்ட நாள்: கோடைகாலத்தைத் தொடர்ந்து அமீரகத்தில் உயரும் வெப்பநிலை….
ஐக்கிய அரபு அமீரகம் இன்று (ஜூன் 21), ஆண்டின் மிக நீண்ட நாளை அனுபவிக்க உள்ளது. நாட்டில், கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. அதைத் தொடர்ந்து, ஜூன் மூன்றாவது வாரத்தில் நாடு ‘astronomical summer’ என்று அழைக்கப்படும் நிகழ்வை இன்று காணவிருக்கிறது. அதாவது, பூமியின் துருவங்களில் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் சாய்ந்திருக்கும் போது கோடைகால சங்கிராந்தியுடன் பருவம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்வானது ஐக்கிய அரபு அமீரகம் உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் மிக நீண்ட நாளைக் குறிக்கிறது எனவும் அந்த ஆய்வுகள் கூறியுள்ளன. குறிப்பாக, அமீரகத்தில் இந்நிகழ்வானது ஜூன் 21ம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி ய வரை என 13 மணி நேரம் 48 நிமிடங்கள் நீடிக்கும் என்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஆண்டுகளில் ஒவ்வொரு ஜூன் மாதம் 21ம் தேதி அன்று மிகவும் நீண்ட நாள் நிகழ்கிறது. இருப்பினும், இந்த ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகளில் இது ஜூன் 20 அன்று நிகழும் என கூறப்பட்டுள்ளது. அதாவது 1796ம் ஆண்டுக்கு பின்னர் ஒரு நாள் முன்னதாகவே இது நிகழவிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அமீரகத்தைப் பொறுத்தவரை ஆண்டின் மிக நீண்ட நாள் இன்று (ஜூன் 21) நிகழும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் வெப்பநிலை அதிகரித்து கோடை காலம் தொடங்கும் போது, மே மாதம் வரை சராசரி வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) காலநிலை நிபுணர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் உட்பட அரபு உலகம் தற்போது ‘கனாட் அல் துரையா’ என அழைக்கப்படும் வசந்த காலத்தின் முடிவை அனுபவித்து வருகிறது, அங்கு வெப்பநிலை பொதுவாக 40 ° C-ஐ தாண்டும். இந்த காலகட்டத்தில், ஈரப்பதம் அளவு குறைவதால் காற்று பொதுவாக வறண்டு இருக்கும்.
ஜூலை நடுப்பகுதியில் கடுமையான கோடை
அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், வெப்பமண்டல காற்று இங்கு ஆதிக்கம் செலுத்துவதைக் காண்கிறது என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். நிபுணர்களின் கூற்றுப்படி, மிகவும் தீவிரமான கோடை காலம் பொதுவாக ஜூலை நடுப்பகுதியில் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கும். அதிக வெப்பநிலையுடன், ஈரப்பதத்தின் அளவு 90 சதவீதமாக உயரலாம் அல்லது பாலைவனத்தில் இருந்து உருவாகும் தூசி புயல்கள் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை மாதங்கள் அதிகாரப்பூர்வமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை தொடர்கின்றன என்றும், வானியல் ரீதியாக, செப்டம்பர் 22 கோடை காலம் முடிவடைகிறது என்றும் NCM இன் காலநிலை நிபுணர் தெரிவித்துள்ளார். மேலும், அரபு நாடுகளில் உச்ச கோடை வெப்பத்தின் முடிவைக் குறிக்கும் சுஹைல் நட்சத்திரம் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் உதயமாகும். அதேநேரத்தில் நாடு அதன் இலையுதிர் காலத்திற்கு மாறும்போது வெப்பநிலை படிப்படியாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel