UAE: ஷார்ஜாவில் பெண்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பிரத்யேக கடற்கரை.. எங்கு தெரியுமா..??
அமீரக சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களின் உத்தரவின் பேரில் ஷார்ஜாவில் பல நலத்திட்டங்கள் சமீப காலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஷார்ஜாவிற்கு சுற்றுலாவாசிகளை ஈர்க்கவும் ஷார்ஜாவில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வசதிக்காகவும் என பல திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதில் ஒன்றாக பெண்களுக்கு பிரத்யேகமாக ஒரு புதிய கடற்கரை தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. கோர்பக்கனின் லுலுய்யா பகுதியில் உள்ள 500 மீட்டர் கடற்கரை பெண்களுக்கு முழுமையான தனியுரிமையை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. இங்கு ஒரு கஃபே, மருத்துவமனை மற்றும் பிரார்த்தனை அறை போன்ற பிற சேவைகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடற்கரை திட்டம் மட்டுமல்லாது, ஷார்ஜா ஆட்சியாளர் கோர்பக்கான் நகரில் அல் பர்தி 6 மற்றும் அல் பாத்தா பகுதிகளை இணைக்கும் பாதசாரி பாலம் கட்டவும் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து RTA ஷார்ஜாவின் தலைவர் யூசுப் காமிஸ் அல் உத்மானி, புதிய பாலம் இரு பகுதிகளுக்கு இடையே குடியிருப்பவர்களின் நடமாட்டத்திற்கு உதவும் என்று கூறியுள்ளார். அத்துடன் ஹயாவா பகுதியில் உள்ள உள் சாலைகளில் RTA மாற்றங்களைச் செயல்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel