அமீரக செய்திகள்

துபாய்: வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் ஒரு மாணவர் பலி, 11 பேர் காயம்.. வேகமாக சென்றதால் ஏற்பட்ட விபத்து..

அமீரகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று (ஆகஸ்ட் 26) முதல் மீண்டும் இயங்க துவங்கியுள்ள நிலையில் துபாய் நெடுஞ்சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்துள்ள துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தானது ஹத்தா-துபாய் சாலையில் நடந்துள்ளது.

வேகமாக சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் வேகத்தடையின் தாக்கத்தால், கட்டுப்பாட்டை இழந்து இரும்புத் தடுப்புச் சுவரில் மோதி சாலையின் ஓரத்தில் உள்ள மணல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தெரிவிக்கையில் அதிக வேகம் மற்றும் ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று துபாய் காவல்துறையின் செயல்பாட்டு விவகாரங்களுக்கான தளபதியின் உதவியாளர் மேஜர் ஜெனரல் சைஃப் மஹிர் அல் மஸ்ரூயி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட விபத்தானது மாணவர் உயிரிழப்புக்கு வழிவகுத்ததுடன் மற்றவர்களுக்கும் பலவிதமான காயங்கள் ஏற்பட செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலில் விபத்து தொடர்பான அறிக்கையைப் பெற்றவுடன், பொது போக்குவரத்து இயக்குநரகத்தின் குழுக்கள் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றுள்ளன. போக்குவரத்து விபத்து துறையின் நிபுணர்களும் நிலைமையை மதிப்பிடவும், விபத்துக்கான காரணங்களை கண்டறிய துல்லியமான ஆதாரங்களை சேகரிக்கவும் விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், போக்குவரத்து ரோந்துகள் போக்குவரத்து ஓட்டத்தை ஒழுங்குபடுத்தியதனால், விபத்து நடந்த இடத்தில் ஆம்புலன்ஸ்கள் தங்கள் கடமைகளைச் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வசதியாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் அல் மஸ்ரூயி, மாணவர்களை பாதுகாப்பாக பள்ளிக்கு கொண்டு செல்வதற்கும், போக்குவரத்து விதிமுறைகளில் முறையாக இருப்பதை உறுதி செய்வதற்கும், உயர் திறன்கள் மற்றும் கவனத்துடன் ஓட்டக்கூடிய ஓட்டுநர்களைத் தேர்ந்தெடுக்கும்படி பெற்றோரை வலியுறுத்தியுள்ளார். அத்துடன் அனைத்து வாகன உதிரிபாகங்களின் பாதுகாப்பையும் சரிபார்த்தல், டயர்களை ஆய்வு செய்தல் மற்றும் அவற்றின் நிலையை மதிப்பிடுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

ஓட்டுநர்கள் மற்றும் சாலைப் பயனாளிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் சாலைப் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கான அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன், வாகனத்தின் பாதுகாப்பையும் அவர்களின் உயிரையும் மற்றவர்களின் உயிரையும் பாதுகாப்பதற்கான விதிமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!