வெளிநாட்டவர்களுக்கான பொது மன்னிப்பை டிசம்பர் வரை நீட்டித்த அமீரக அரசு..!! மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா காலாவதியாகி சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருப்பவர்களுக்காக, அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி பொதுமன்னிப்பு வழங்கி வருகிறது. இந்திலையில் இன்று வியாழக்கிழமை பொது மன்னிப்பு திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது, அதன்படி புதிய காலக்கெடு டிசம்பர் 31, 2024 அன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய இந்தத் திட்டம் முதலில் அக்டோபர் 31 ஆம் தேதி முடிவடையத் திட்டமிடப்பட்டது. ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் விசா நிலையை முறைப்படுத்தியுள்ளனர். அத்துடன் அரசாங்க அதிகாரிகள் நாட்டில் விசா இல்லாமல் தங்கியிருந்தவர்களுக்கு மில்லியன் கணக்கான அபராதங்களைத் தள்ளுபடியும் செய்தனர்.
ICPன் இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சுஹைல் சயீத் அல் கைலி இது குறித்து பேசுகையில், பொது மன்னிப்புக்கான காலக்கெடுவை நீட்டிக்கும் முடிவு ஐக்கிய அரபு அமீரகத்தின் 53 வது யூனியன் தினத்தை கொண்டாடுவதோடு, நாட்டின் மனிதாபிமான செயலுடன் ஒத்துப்போவதாக கூறியுள்ளார்.
மேலும், நாட்டை விட்டு வெளியேறுவதன் மூலமோ அல்லது வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பெறுவதன் மூலமும், அவர்களின் ரெசிடன்சி நிலையை திருத்தி நாட்டில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்புபவர்கள், அல்லது தங்கள் நிலையைத் தீர்த்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு இது பதிலளிக்கும் விதமாகவும் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அக்டோபர் 31 அன்று பொது மன்னிப்பு காலக்கெடுவுக்கு முந்தைய கடைசி நாட்களில் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையும் அல் கைலி குறிப்பிட்டுள்ளார். எனவே காலக்கெடுவை நீட்டிப்பதற்கான முடிவு, விசா சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதத்திலிருந்து விலக்கு மற்றும் மறு நுழைவுத் தடையைப் பெறாமல் தங்கள் நிலையைத் தீர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக அவர் கூறுகையில், இந்த முன்முயற்சிகள் விசா விதிகளை மீறுபவர்கள் தங்கள் நிலையைத் தீர்ப்பதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கும், அவர்களின் முழு உரிமைகளைப் பெறுவதற்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு பெரிய வாய்ப்பை வழங்குவதற்கு ICP இன் மனிதாபிமான அம்சத்தை உள்ளடக்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.