தீபாவளியை முன்னிட்டு இந்தியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த அமீரக தலைவர்கள்..!!

உலகமெங்கும் இன்று (அக்டோபர் 31) தீபாவளி சிறப்பாக கொண்டாடி வரும் வேளையில் பல்வேறு உலக தலைவர்களும் தீபாவளிக்காக வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அவர்களில் ஐக்கிய அரபு அமீரக தலைவர்களும் தீபாவளியை முன்னிட்டு தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். அவர்கள் சமூக ஊடகங்களில் தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தி, ஆங்கிலம் மற்றும் அரபு ஆகிய மூன்று மொழிகளில் ட்வீட் செய்துள்ள ஐக்கிய அரபு அமீரக அதிபர், “ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகம் முழுவதும் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வரும் ஆண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அமைதி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைத் தரட்டும்” என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் “ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகம் முழுவதும் தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். தீபத்திருவிழா உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவரட்டும். வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கட்டிடங்களில் உள்ள பால்கனிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாவை கொண்டாடி வருகின்றனர். அத்துடன் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.