துபாய் போலீஸின் அதிரடி பிரச்சாரம்.. 1800 இ-ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள்கள் பறிமுதல்.. அபராதமும் விதிப்பு..!!
துபாயில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக துபாய் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பிரச்சாரத்தில், விதிமீறல்களில் ஈடுபட்ட 1,780 ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை ஆணையம் நேற்று திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
அல் ரிஃபா காவல் நிலையத்துடன் இணைந்து ஆணையம் நடத்திய இந்த பிரச்சாரத்தில், அல் ரிஃபா அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 1,417 சைக்கிள்கள் மற்றும் 363 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
அதாவது வாகனங்கள் செல்லக்கூடிய பொதுச் சாலைகள் மற்றும் பாதசாரி பாதைகள் போன்ற நியமிக்கப்படாத பகுதிகளில் இ-ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள்களின் முறையற்ற பயன்பாடு, ரைடர்ஸ் மற்றும் பிற சாலைப் பயனாளர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துவதாக காவல்துறை ஆணையம் கூறியுள்ளது.
மேலும் ஹெல்மெட் அணியத் தவறியது, போக்குவரத்து சிக்னல்களை அலட்சியம் செய்வது, பிரதிபலிப்பு ஆடை மற்றும் சரியான எச்சரிக்கை விளக்குகள் போன்ற அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது போன்ற விதிமீறல்களுக்காக 251 அபராதங்களையும் ஆணையம் வழங்கியுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇந்நிலையில் துபாயில் இ-ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள்களை பயன்படுத்தும் ரைடர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஆணையம் எடுத்துரைத்துள்ளது. அவற்றை பின்வருமாறு கீழே காணலாம்.
- நியமிக்கப்பட்ட பைக் பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- ஜாகிங் மற்றும் நடைப் பாதைகளைத் தவிர்க்க வேண்டும்.
- மின்சார ஸ்கூட்டர்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- பைக் அல்லது இ-ஸ்கூட்டரை ஓவர்லோட் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- சரியான முன் மற்றும் பின் விளக்குகளை வாகனங்களில் பொருத்த வேண்டும்.
- ஹெல்மெட் மற்றும் பிரதிபலிப்பு உள்ளாடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.
- பாதசாரிகள் கடக்கும் பாதையில் சைக்கிள்களில் இருந்து கீழே இறக்கி நடக்க வேண்டும்.
- ரைடர்கள் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க வேண்டும்.
- வாகனங்களில் அனுமதியின்றி மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- சவாரி செய்பவர்கள், குறிப்பாக இரவில் அல்லது பாதகமான வானிலையின் போது பின்புற மற்றும் பக்க விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
அத்துடன், ரைடர்களின் பாதுகாப்பற்ற நடத்தைகள் மற்றும் ஆபத்தான நடைமுறைகள் குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால், துபாய் போலீஸ் செயலியில் உள்ள ‘போலீஸ் ஐ (Police Eye)’ சேவையின் மூலமாகவோ அல்லது ‘நாம் அனைவரும் போலீஸ் (We Are All Police’ என்ற ஹாட்லைன் 901 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ புகாரளிக்குமாறும் துபாய் காவல்துறை ஆணையம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel