வளைகுடா செய்திகள்

சவூதி: இந்தியா உட்பட 14 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மல்டி என்ட்ரி விசாக்கள் கிடையாது..!! விசா கொள்கையை மாற்றிய அரசு…

சவுதி அரேபியா அரசாங்கம் வரும் பிப்ரவரி 1, 2025 முதல், இந்தியா உட்பட 14 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான விசா கொள்கையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், இப்போது சுற்றுலா, வணிகம் மற்றும் ஃபேமிலி விசிட் போன்றவற்றிற்கு சிங்கிள் என்ட்ரி விசாக்களை மட்டுமே வழங்குகிறது. அத்துடன் முந்தைய ஒரு வருட மல்டி என்ட்ரி விசாக்களை காலவரையின்றி இடைநிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையால், இந்தியா, அல்ஜீரியா, பங்களாதேஷ், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, பாகிஸ்தான், சூடான், துனிசியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது. சவூதிக்கு வரும் அங்கீகரிக்கப்படாத ஹஜ் வழிபாட்டாளர்களை கட்டுப்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

முக்கிய மாற்றங்கள்

  • சிங்கிள் என்ட்ரி விசாக்கள் மட்டுமே வழங்கப்படும்.
  • ஒவ்வொரு விசாவும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும், அதிகபட்சமாக 30 நாட்கள் தங்கலாம்.
  • ஹஜ், உம்ரா, டிப்ளோமேட்டிக் மற்றும் ரெசிடென்சி விசாக்கள் மாறாமல் உள்ளன.
  • பெரும்பாலானோர் மல்டி என்ட்ரி விசாக்களை தவறாகப் பயன்படுத்தியதே இந்தக் கொள்கைத் திருத்தத்திற்குக் காரணம் என்று சவுதி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது, சில பயணிகள் நீண்டகால விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்து, பின்னர் சட்டவிரோதமாக வேலைக்காக தங்குகின்றனர் அல்லது பொருத்தமான அங்கீகாரமின்றி ஹஜ் செய்கின்றனர் என்று அரசாங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் கூட்ட நெரிசல்

சவூதி அரேபியா வருடாந்திர ஹஜ் பயணத்தை கடுமையாக கட்டுப்படுத்துகிறது, ஒவ்வொரு தேசத்திற்கும் குறிப்பிட்ட ஒதுக்கீட்டை ஒதுக்குகிறது. அங்கீகரிக்கப்படாத வழிபாட்டாளர்களின் வருகையால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

2024 ஆம் ஆண்டில், நாட்டில் நிலவிய கடுமையான வெப்பம் மற்றும் வழிபாட்டாளர்களின் கூட்ட நெரிசல் காரணமாக 1,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்வாறு பதிவு செய்யப்படாத வழிபாட்டாளர்களின் வருகை சோகத்திற்கு கணிசமாக பங்களித்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர். எனவே, இத்தகைய அபாயங்களைத் தணிப்பதையும், ஹஜ்ஜில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பங்கேற்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த கொள்கை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், சவூதி அரசாங்கம் ஹஜ் நடவடிக்கைகளை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதையும், கூட்ட நிர்வாகத்தை மேம்படுத்துவதையும், அனைத்து பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்காலிக நடவடிக்கை

சவுதி மல்டி என்ட்ரி விசாக்களை இடைநிறுத்துவது தற்காலிக நடவடிக்கை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இருப்பினும், முடிவை மதிப்பாய்வு செய்வதற்கான காலக்கெடு எதுவும் இல்லை. மேலும் நடவடிக்கைகளை கருத்தில் கொள்வதற்கு முன் புதிய கொள்கையின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் பயணிகளை சிங்கிள் என்ட்ரி விசாக்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் அபராதம் அல்லது பயண இடையூறுகளைத் தவிர்க்க புதிய விசா விதிகளை கடைபிடிப்பது அவசியமாகும்.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!