Uncategorizedவளைகுடா செய்திகள்

கத்தாரில் தாக்குதல்.. அமீரகத்தில் விமான சேவை நிறுத்தம்.. பஹ்ரைன், குவைத் வான்வெளி மூடல்.. அதிகரிக்கும் பதற்ற நிலை..

அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் (US Base) உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தவிருப்பதாக ஈரான் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்பொழுது ஈராக் மற்றும் கத்தாரில் உள்ள US Base-களில் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ஆறு ஏவுகணைகள் கத்தார் தலைநகரில் உள்ள தோஹாவில் அமைந்திருக்கும் அல் உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக கத்தார் தனது வான்வெளியில் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்திருந்தது. அத்துடன் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக கத்தார் அதிகாரிகளிடம் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதல் சகோதர நாடான கத்தார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும் குடியிருப்பாளர்கள் வசிக்கும் பகுதிகள் அல்லாது அமெரிக்க தளம் உள்ள பகுதியை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

கத்தார் மட்டுமல்லாது குவைத் மற்றும் பஹ்ரைனிலும் வான்வெளி மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பஹ்ரைன் முழுவதும் சைரன் ஒலி கேட்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அமீரகத்திலும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்பொழுது நிலவும் இந்த சூழ்நிலையானது வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!