அமீரகத்தின் கட்டண பார்க்கிங் ஆப்பரேட்டரான ‘Parkonic’ நிறுவனமானது, திருத்தப்பட்ட மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட சந்தாக் கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளதால், ‘Discovery Gardens’ குடியிருப்பாளர்களுக்கு பார்க்கிங் செலவு மேலும் மலிவானதாக மாறியுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, டிஸ்கவரி கார்டன்ஸ் குடியிருப்பாளர்கள் சலுகை விலையிலான சந்தா பார்க்கிங் கட்டணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது தெரிய வந்துள்ளது.
மாதாந்திர சந்தாக்கள் இப்போது 672 திர்ஹம்ஸ் ஆகவும், காலாண்டு சந்தா 1,999 திர்ஹம்ஸ் ஆகவும், ஆறு மாதத் திட்டங்கள் 3,999 திர்ஹம்ஸ் ஆகவும், மற்றும் வருடாந்திரத் திட்டங்கள் 4,999 திர்ஹம்ஸ் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய கட்டணங்களான மாதாந்திர மற்றும் காலாண்டுத் திட்டங்கள் முறையே 945 திர்ஹம்ஸ் மற்றும் 2,625 திர்ஹம்ஸ் ஆக இருந்ததை விட இது ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். இந்தப் புதுப்பிக்கப்பட்ட விலை நிர்ணயம் குடியிருப்பாளர்களின் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க சேமிப்பை வழங்குகிறது.
இப்பகுதியில் பார்க்கிங் அணுகலை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சமூகத்தின் கருத்துகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனான ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, குடியிருப்பாளர்கள் பார்க்கோனிக் (parkonic tenant registration portal) இணையதளம் மூலம் இலவச பார்க்கிங் அனுமதிகளுக்கு விண்ணப்பிக்கலாம், அதே சமயம் கட்டணச் சந்தாக்கள் நிறுவனத்தின் இணையதளம் மற்றும் மொபைல் செயலி வழியாகக் கிடைக்கின்றன. இந்த நடைமுறைக்கு முன்னதாக பார்க்கிங் செயல்முறையை முடிக்குமாறு பிராப்பர்ட்டி டெவலப்பர் நகீல் (nakheel ) மின்னஞ்சல் மூலம் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், அனுமதிகளைச் செயல்படுத்த, குத்தகைதாரர்கள் தங்களின் பட்டா, எஜாரி மற்றும் குத்தகை ஒப்பந்தம் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒப்புதல் சரிபார்ப்புக்கு உட்பட்டது என்பதையும் Parkonic தெளிவுபடுத்தியுள்ளது. அதன் பிறகு குடியிருப்பாளர்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட PIN எண்ணைப் பயன்படுத்தி PARKONIC+ செயலி மூலம் பார்க்கிங் அணுகலைச் செயல்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel