துபாயில் சொத்து வாங்கும் வெளிநாட்டவர்களுக்கு வசதியாக, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சொத்து சார்ந்த குடியிருப்பு விசா விதிகளை துபாய் அரசு புதுப்பித்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இரண்டு வருட குடியிருப்பு அனுமதிக்கு தகுதி பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துபாய் நிலத் துறை தனது கியூப் (Cube) தளம் மூலம் வெளியிட்ட புதுப்பிப்புகளின்படி, தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கான (solo investors) முந்தைய குறைந்தபட்ச சொத்து மதிப்புத் தேவையாக இருந்த 750,000 திர்ஹம்ஸ் நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விண்ணப்பதாரர் அந்தச் சொத்தின் ஒரே உரிமையாளராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனி உரிமையாளர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு இல்லை
புதிய விதிகளின்படி, ஒரு சொத்தை முழுமையாக சொந்தமாக வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், சொத்தின் மதிப்பைப் பொருட்படுத்தாமல், உரிமை தெளிவாக அவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வரை, இரண்டு வருட குடியிருப்பு விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம், இதற்கு முன்பாக நடைமுறையில் இருந்த, சொத்து மதிப்பின் குறைந்தபட்ச வரம்பான 750,000 திர்ஹம்ஸை பூர்த்தி செய்யாத, சிறிய சொத்தை வைத்திருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இரண்டு வருட விசாவை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
கூட்டு உரிமைக்கான புதிய விதிகள்
தனிநபருக்கான புதுப்பித்தல் மட்டுமல்லாமல், கூட்டு உரிமையுடன் சொத்துக்களை வைத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் ஒரு புதிய நிபந்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சொத்து சமமாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், விசாவுக்குத் தகுதி பெற ஒவ்வொரு முதலீட்டாளரும் குறைந்தபட்சம் 400,000 திர்ஹம்ஸ் பங்கை வைத்திருக்க வேண்டும்.
கூடுதல் தேவைகள்
அதேபோல், அடமானம் அல்லது தவணை அடிப்படையிலான சொத்துக்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், வங்கி அல்லது பிராப்பர்ட்டி டெவலப்பரிடமிருந்து, செலுத்தப்பட்ட தொகைகள் மற்றும் நிலுவைத் தொகைகளை உறுதிப்படுத்தும் தடையில்லாச் சான்றிதழை (NOC) வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான பிற ஆவணங்கள்:
- துபாயில் உள்ள சொத்து உரிமைப் பத்திரம்
- செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் அடையாள அட்டை
- மருத்துவக் காப்பீடு
- துபாய் காவல்துறையிடமிருந்து நன்னடத்தைச் சான்றிதழ்
- அதிகாரப்பூர்வ விவரக்குறிப்புகளுக்கு இணங்க தனிப்பட்ட புகைப்படம்
விரிவான விசா அமைப்பின் ஒரு பகுதி
குடியிருப்பு மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் மற்றும் DLD ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தின் கீழ், ஐக்கிய அரபு அமீரகம் தனது சொத்து சார்ந்த குடியிருப்பு கட்டமைப்பைத் தொடர்ந்து சீரமைத்து வரும் வேளையில் இந்த புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த அமைப்பு சொத்து உரிமையாளர்களுக்கு மூன்று வகையான விசாக்களை வழங்குகிறது. அவை,
- 2 மில்லியன் திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேற்பட்ட சொத்து முதலீடுகளுக்கான 10 ஆண்டு கோல்டன் விசா
- 2 மில்லியன் திர்ஹம்ஸிற்கு கீழான சொத்து உரிமையாளர்களுக்கான இரண்டு ஆண்டு முதலீட்டாளர் விசா
- 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஐந்து ஆண்டு ஓய்வூதிய விசா
துபாய் அறிவித்துள்ள இந்த புதிய மாற்றங்கள் சொத்து உரிமைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவான தகுதி அளவுகோல்களைப் பராமரிக்கும் அதே வேளையில், குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த மதிப்புள்ள சொத்துப் பிரிவுகளில் அதிக முதலீட்டாளர்களை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel