ADVERTISEMENT

போரினால் ஏற்பட்ட இடையூறுகளில் இருந்து விரைவாக மீண்டு வருவோம்.!! எமிரேட்ஸ் நம்பிக்கை!!

Published: 24 Apr 2026, 8:39 PM |
Updated: 24 Apr 2026, 8:40 PM |
Posted By: Menaka

துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ், ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையே 40 நாட்களாக நீடித்த போரின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான போக்குவரத்து சேவை கடுமையாக பாதிப்புக்குள்ளாகியது. இந்நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், அமீரகத்தில் படிப்படியாக விமான போக்குவரத்து சேவை மீண்டும் வலுவான நிலைக்கு திரும்பி வருகிறது.

ADVERTISEMENT

இதன் காரணமாக, துபாயின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸின் உலகளாவிய விமானப் போக்குவரத்தும் கடும் சரிவை சந்தித்தது. இதனிடையே ஈரான் தாக்குதல்களால் ஏற்பட்ட இடையூறுகளில் இருந்து விரைவாக மீண்டு வருவோம் என எமிரேட்ஸ் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. பயணிகளிடையே அதிகரித்துள்ள வலுவான தேவை இந்த மீட்சிக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்லினில் நடைபெற்ற CAPA விமான நிறுவனத் தலைவர்கள் மாநாட்டில் பேசிய எமிரேட்ஸ் தலைவர் டிம் கிளார்க், விமான நிறுவனம் தற்போது சுமார் 65 சதவிகிதத் திறனில் இயங்கி வருவதாகவும், வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக அதன் வலையமைப்பில் சுமார் 13 சதவிகிதம் இன்னும் அணுக முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மோதலின் தாக்கம்

பிராந்திய விமானப் போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதைப் பொறுத்தே முழுமையான நிலைக்கு திரும்ப முடியும் என்று கிளார்க் குறிப்பிட்டுள்ளார். அது மீண்டும் திறக்கப்பட்ட பிறகும், செயல்பாடுகள் முழுமையாக நிலைபெறுவதற்கு முன்பாக, ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்கு இடையூறுகள் இருக்கும் என விமான நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் கிளார்க் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய இந்த மோதல், பிராந்தியம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்களை ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்வதற்கும், உலகளாவிய சேவைகளுக்கான செயல்பாடுகளைக் குறைப்பதற்கும் வழிவகுத்தது.

ADVERTISEMENT

இந்த சவால்கள் இருந்தபோதிலும், பயணத் தேவை மீள்தன்மையுடன் இருப்பதாக எமிரேட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட வழித்தடங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட அட்டவணைகள் இருந்தபோதிலும் பயணிகள் தொடர்ந்து பயணம் செய்வதால், விமான பயணத்திற்கான தேவை வலுவாகவே உள்ளது என்று கிளார்க் கூறியுள்ளார்.

இந்த கடுமையான சூழலில், துபாயின் விமானப் போக்குவரத்துச் செயல்பாடுகளைச் சீராகவும் திறமையாகவும் பராமரிக்க, துபாய் ஏர்போர்ட்ஸ், எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய் மேற்கொண்ட முயற்சிகளை ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் பாராட்டியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel