உலகெங்கிலும் இருந்து இலட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் பணம் சம்பாதிக்கும் பொருட்டு அமீரகத்தில் தங்கி பணிபுரியும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வாழ்க்கை நிலைமைகளையும் தொழிலாளர் நலனையும் மேம்படுத்தும் நோக்கில், மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MOHRE) தொழிலாளர் தங்குமிடங்களுக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி, முதலாளிகள் அல்லது நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு உரிமம் பெற்ற மற்றும் பொருத்தமான வீடுகளை வழங்க வேண்டும் அல்லது வீட்டு வாடகைக்கான அலவன்சை (allowance) வழங்க வேண்டும். மேம்பட்ட சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன், இலவச இணைய அணுகலை வழங்குவது ஒரு முக்கிய மாற்றமாகும்.
குறிப்பாக, 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட பெரிய தங்குமிடங்களில், நிறுவனங்கள் 24 மணி நேர மருத்துவ நிலையங்களை இயக்க வேண்டும் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் நிதிச் சேவைகளுக்கான அணுகலை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களின் நல்வாழ்வை ஆதரிக்கும் வகையில், அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களில் சமூக மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யுமாறு தொழிலாளர் விடுதி மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தொழிலாளர் தங்குமிடங்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களிலிருந்து பாதுகாப்பான தூரத்தைப் பேணிக்கொண்டு, தொழில்துறைப் பகுதிகள் மற்றும் போக்குவரத்து இணைப்புகளுக்கு அருகில் அமைந்திருக்க வேண்டும் என இந்த வழிகாட்டுதல்கள் கோருகின்றன.
இவை மட்டுமில்லாமல், தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கைத் தரமும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. வேலையளிப்பவர்கள் முறையான விளக்கு வசதி, சுகாதாரம், சுத்தமான குடிநீர், சமையல் வசதிகள், பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பான எரிவாயு அமைப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, அவர்கள் தங்குமிடங்களில் முதலுதவி அறைகள், தனிமைப்படுத்தும் பகுதிகள் மற்றும் அவசரகால பதில் நடவடிக்கைகள் ஆகியவை இடம்பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பெரிய இடங்களில், வளாகத்திலேயே மருத்துவப் பணியாளர்களும் ஆம்புலன்ஸ்களும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு மத்தியில், தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைகள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் உதவி அல்லது புகார்களுக்காக அதிகாரிகளைத் தொடர்புகொள்வது எப்படி என்பது குறித்த தெளிவான தகவல்கள் பல மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இவை தவிர, அவசரகால அறிவிப்புப் பலகைகள், தீ பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வழக்கமான வெளியேற்றப் பயிற்சிகள் ஆகியவையும் கட்டாயமாகும்.
அமீரகத்தில் தங்கி பணிரியும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும், நாடு முழுவதும் தொழிலாளர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்தப் புதிய நடவடிக்கைகள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel