அமீரகங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதையும், எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட முக்கிய போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி மன்றம் ஆய்வு செய்துள்ளது.
எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் சுஹைல் பின் முகமது அல் மஸ்ரூயி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முக்கிய தேசியத் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) பொது இயக்குநரும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மத்தார் அல் தாயர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் ஒன்றிணைந்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
மெய்நிகராக நடைபெற்ற இக்கூட்டத்தில், துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் இடையே பொதுப் போக்குவரத்து இணைப்புகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வெளியான தகவல்களின் படி, நெரிசலைக் குறைத்து, போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய சாலை மேம்பாட்டுத் திட்டமான நான்காவது கூட்டாட்சி நெடுஞ்சாலைத் திட்டம், இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும். முன்மொழியப்பட்ட இந்த நெடுஞ்சாலை சுமார் 68 கி.மீ. நீளத்திற்கு விரிந்து, பல வழித்தடங்கள், 10 முக்கிய இண்டர்செக்ஷன்கள் மற்றும் பல மேம்பாலங்களைக் கொண்டிருக்கும். இதன் மதிப்பிடப்பட்ட செலவு 6 பில்லியன் திர்ஹம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடம், ஏற்கனவே உள்ள மூன்று முக்கிய கூட்டாட்சி வழித்தடங்களான E11 (அல் இத்திஹாத்), E311 (ஷேக் முகமது பின் சயீத்) மற்றும் E611 (எமிரேட்ஸ் சாலை) ஆகியவற்றுடன் இணைந்து, நாட்டின் நான்காவது அமீரக இணைப்பு நெடுஞ்சாலையாக அமையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டம், போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தி, நெரிசலைக் குறைத்து, நாடு முழுவதும் மக்கள் மற்றும் பொருட்களின் திறமையான போக்குவரத்திற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்மொழியப்பட்ட ஒரு போக்குவரத்து வலையமைப்பில், பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்புகளைப் பயன்படுத்தும் 10 வழித்தடங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் முக்கிய நகர மையங்களுக்கான பிரத்யேக வழித்தடங்கள் மற்றும் இணைப்புகள் அடங்கும். இந்தத் திட்டம் தனியார் வாகனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, தினசரி பயணத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், சமீபத்திய கனமழையின் போது சாலைப் பாதுகாப்பையும், தடையற்ற போக்குவரத்து இயக்கத்தையும் உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் ஆய்வு செய்த அதிகாரிகள், எதிர்காலத் தயார்நிலையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளனர்.
அத்துடன் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும், நிலையான போக்குவரத்துத் தீர்வுகளை ஊக்குவிப்பதற்கும் உள்ள தேவையை அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்த முயற்சிகள், போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையேயான இணைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால உத்தியில் உள்கட்டமைப்பு மேம்பாடு ஒரு முக்கியப் பகுதியாகத் தொடர்கிறது என்றும், அடுத்த கட்டமாக மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் நகர்ப்புற விரிவாக்கத்தை ஆதரிக்கக்கூடிய, மேலும் திறமையான மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்புகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் அல் மஸ்ரூயி கூறியுள்ளார்..
இவ்வாறு அமீரகம் முழுவதும் மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்தை அதிகரிக்க உதவும் வகையில், முக்கிய கூட்டாட்சி சாலை வலையமைப்புகளுடன் இணைப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் அஜ்மானில் இணைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் இந்தக் குழு விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel