ADVERTISEMENT

ஈத் அல் அதா: அமீரக பள்ளிகளில் 9 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு.!!

Published: 30 Apr 2026, 6:34 PM |
Updated: 30 Apr 2026, 6:35 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல்-அதா (Eid al-Adha) பண்டிகை காரணமாக பள்ளிகளில் 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கப்பெற்றுள்ளது. அதாவது ஈத் அல்-அதா விடுமுறையோடு இணைந்து, மே 25 முதல் 29 வரை மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு இடைப்பருவ விடுமுறை (midterm break) அளிக்கப்படும் என்று அமீரகத்தின் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த விடுமுறை நாட்களுக்கு முன்னும் பின்னும் வரும் வார இறுதி நாட்களையும் சேர்த்துப் பார்க்கையில், மொத்த விடுமுறை காலம் ஒன்பது நாட்களாக நீளும். இது மூன்றாவது கல்விப் பருவத்தின் நடுவே ஒரு சிறந்த இடைவேளையாக அமையும்.

தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தேதிகள்

  • மே 25–29: இடைப்பருவ விடுமுறை மற்றும் ஈத் விடுமுறை
  • ஜூன் 1: வகுப்புகள் மீண்டும் தொடக்கம்
  • ஜூன் 15–16: மாதிரித் தேர்வுகள் (Mock examinations)
  • ஜூன் 17: இஸ்லாமியப் புத்தாண்டு விடுமுறை
  • ஜூன் 24 – ஜூலை 3: இறுதித் தேர்வுகள்
  • ஜூலை 3: பள்ளியின் கடைசி நாள்

இதையடுத்து, விடுபட்டவர்களுக்கான மாற்றுத் தேர்வுகள் (Make-up exams) ஜூலை 6 முதல் 9 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதன் பிறகு, மீண்டும் தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் ஜூலை 14 முதல் 17 வரை மறுதேர்வுகளை (re-sit exams) எழுதலாம். கடைசியாக, இவர்களுக்கான இறுதி முடிவுகள் ஜூலை 20-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

ADVERTISEMENT

இதற்கிடையில், நிர்வாக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜூலை 13 முதல் 17 வரை நடைபெறும் பயிற்சித் திட்டங்களில் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், அடுத்த கல்வி ஆண்டிற்குத் தயாராகவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கான கோடைக்கால விடுமுறை ஜூலை 18-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்விசார் தேவைகளையும் போதுமான ஓய்வு காலங்களையும் சமநிலையில் வைத்திருக்கும் வகையில் இந்த கால அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது மாணவர்கள் இறுதித் தேர்வுகளுக்குத் தயாராகப் போதுமான நேரத்தை அளிப்பதோடு, கல்வி ஆண்டின் நிறைவு சுமூகமாக அமைவதையும் உறுதி செய்கிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel