ADVERTISEMENT

‘OPEC’ அமைப்பிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்? பின்னணியில் உள்ள காரணங்களை வெளிப்படுத்திய அரசு அதிகாரிகள்….

Published: 29 Apr 2026, 12:17 PM |
Updated: 29 Apr 2026, 1:29 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம், மே 1, 2026 முதல் ‘OPEC’ மற்றும் பரந்த ‘OPEC+’ கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், ஒருங்கிணைந்த எண்ணெய் உற்பத்திக் கொள்கைகளில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாகப் பங்கேற்று வந்த அமீரகத்தின் பயணம் முடிவுக்கு வருகிறது.

ADVERTISEMENT

அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனமான WAM அறிவித்த இந்த முடிவு, நாட்டின் எரிசக்தி உற்பத்தி உத்தி மற்றும் திறன் குறித்த ஆய்வைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை, எரிசக்தி நிலைத்தன்மையை தொடர்ந்து ஆதரிக்கும் அதே வேளையில், உலகளாவிய சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப செயல்பட ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம் முதன்முதலில் 1967-ல் அபுதாபி வழியாக OPEC-ல் இணைந்தது. 1971-ல் ஐக்கிய அரபு அமீரகமாக உருவாக்கப்பட்ட பிறகும், சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற முக்கிய உற்பத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றி, அமீரகம் ஒரு முக்கிய உறுப்பினராகத் தொடர்ந்தது.

ADVERTISEMENT

கொள்கை மாற்றம் மற்றும் உற்பத்தித் திட்டங்கள்

OPEC-லிருந்து வெளியேறுவதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகம் இனி அந்த அமைப்பின் உற்பத்தி ஒதுக்கீடுகளுக்குக் கட்டுப்படாது. இது, தனது சொந்த உற்பத்தி அளவுகளை நிர்ணயிக்க அதற்கு வழிவகுக்கும். தொடர்ச்சியான முதலீடுகள் மூலம், 2027-ஆம் ஆண்டுக்குள் உற்பத்தித் திறனை ஒரு நாளைக்கு சுமார் 3.4 மில்லியன் பீப்பாய்களிலிருந்து 5 மில்லியன் பீப்பாய்களாக அதிகரிக்க அமீரகம் திட்டமிட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய மற்றும் எதிர்கால எரிசக்தித் திட்டங்கள் குறித்த விரிவான ஆய்வைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட ஒரு கொள்கை முடிவு இது என ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி அமைச்சர் சுஹைல் முகமது அல்-மஸ்ரூயி விளக்கமளித்துள்ளார். இவ்வாறு உற்பத்திக் கட்டுப்பாடுகளுக்கு வெளியே சுதந்திரமாக செயல்படுவது, சந்தை நிலவரங்களுக்கு நாடு மிகவும் திறம்பட பதிலளிக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையைப் பாதிக்கும் பதட்டங்களால் விநியோகச் சவால்கள் தொடர்வதால், சந்தைக் குழப்பங்களைக் குறைப்பதற்காகவே இந்த நேரத்தில் இந்த முடிவு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுகின்றனர்.

சந்தை தாக்கங்கள்

இந்த முடிவு, மூலோபாயத் திட்டமிடல் மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் நிலைமைகள் ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறுகிய காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூடுதல் விநியோகத்தை உலகச் சந்தை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்று சிலர் நம்புகின்றனர், அதேசமயம், அதிகமான உற்பத்தியாளர்கள் சுதந்திரமான உத்திகளுக்கு முன்னுரிமை அளித்தால், இந்த நடவடிக்கை ஒபெக்கின் செல்வாக்கைச் சோதிக்கக்கூடும் என்று மற்றவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சமீபத்திய இடையூறுகள் ஏற்கனவே ஒபெக்கின் உற்பத்தியைக் குறைத்து, விநியோகத்தை இறுக்கமாக்கியுள்ளன. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகரித்த உற்பத்தியானது, சந்தைகளைச் சமநிலைப்படுத்த உதவும், ஆனால் குறுகிய கால ஏற்ற இறக்கங்களையும் அறிமுகப்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எண்ணெய், எரிவாயு மற்றும் தூய்மையான எரிசக்தித் துறைகளில் நிலையான விநியோகம், நீண்டகால வளர்ச்சி மற்றும் பன்முகப்படுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, சுதந்திரமாக இயங்கும் அதே வேளையில் உலகளாவிய எரிசக்திப் பங்காளர்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றப்போவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தரப்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel