நீங்கள் துபாயில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தால், உங்கள் வாடகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு முறையும் உங்கள் Ejari பதிவைப் புதுப்பிப்பது ஒரு அத்தியாவசியமான படியாகும். ஆனால் பல குடியிருப்பாளர்கள், “Ejari புதுப்பித்தலுக்கான கட்டணத்தை உண்மையில் யார் பணம் செலுத்துகிறார்கள்?” என்று இன்னும் குழப்பத்தில் இருக்கிறார்கள். இது தொடர்பான முக்கிய விபரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
எஜாரி (Ejari) என்றால் என்ன?
எஜாரி என்பது வாடகை ஒப்பந்தங்களைப் பதிவு செய்வதற்காக துபாய் நிலத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ ஆன்லைன் பதிவு அமைப்பாகும். இது 2010 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது மற்றும் வாடகை ஒப்பந்தங்கள் அரசாங்க அதிகாரிகளால் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்கிறது. எஜாரி இல்லாமல், துபாயில் பல சேவைகளைச் செயல்படுத்த முடியாது, எனவே இது ஒரு சொத்தை வாடகைக்கு எடுப்பதில் ஒரு முக்கிய அங்கமாகிறது.
இதற்கு யார் பொறுப்பு?
எஜாரி, துபாய் நிலத் துறையால் ஒழுங்குபடுத்தப்பட்டு, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை முகமையால் கண்காணிக்கப்படுகிறது. துபாயின் வாடகைச் சட்டங்களின்படி:
- குத்தகை ஒப்பந்தத்தை (tenancy contract) எஜாரியில் பதிவு செய்வதற்கு வீட்டு உரிமையாளரே பொறுப்பாவார்.
- ஒப்பந்தத்தில் வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி, பொதுவாக குத்தகைதாரரே எஜாரி கட்டணங்களைச் செலுத்துவார்.
இதன் பொருள், வீட்டு உரிமையாளர் பதிவை உறுதி செய்ய வேண்டும் என்றாலும், குத்தகைதாரர்கள் பொதுவாகக் கட்டணத்தைச் செலுத்துவதோடு, புதுப்பித்தல் செயல்முறையையும் அவர்களே முடிப்பார்கள். இருப்பினும், ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் வேறுபட்ட ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டால், அந்த ஒப்பந்தமே பொருந்தும் என்று கூறப்படுகிறது.
எஜாரியை எப்போது புதுப்பிக்க வேண்டும்?
குத்தகையில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் எஜாரியைப் புதுப்பிக்க வேண்டும், பின்வரும் சூழ்நிலைகளில் புதுபிக்க வேண்டும்:
- ஆண்டுதோறும், குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் போதெல்லாம்
- வாடகையில் மாற்றம் செய்யும் போது
- குத்தகைதாரர் விவரங்களில் மாற்றம்
- சொத்துத் தகவலில் ஏதேனும் புதுப்பிப்புகள்
இதற்கு எவ்வளவு செலவாகும்?
துபாயில் எஜாரி புதுப்பிப்பதற்கான செலவு, நீங்கள் விண்ணப்பிக்கும் முறையைப் பொறுத்தது:
- ஆன்லைன் (‘Dubai REST’ செயலி அல்லது ‘DLD’ இணையதளம் வழியாக): சுமார் 177.75 திர்ஹம்ஸ்
- சேவை மையங்கள்: சுமார் 220 திர்ஹம்ஸ்
ஆகவே, வீட்டு உரிமையாளர்கள் பதிவைக் கையாளும்போது, வேறுவிதமாக ஒப்புக் கொள்ளப்பட்டாலன்றி, பொதுவாகக் வாடகைக்கு குடியிருப்பவர்களே கட்டணங்களைச் செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel