ADVERTISEMENT

அபுதாபியில் அருங்காட்சியகங்கள் மற்றும் கலாச்சாரத் தளங்களுக்கு 3 நாட்களுக்கு இலவச நுழைவு அறிவிப்பு!!

Published: 12 May 2026, 8:47 PM |
Updated: 12 May 2026, 8:47 PM |
Posted By: Menaka

இந்தாண்டு சர்வதேச அருங்காட்சியக தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக,மே 16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு அபுதாபி முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கலாச்சார இடங்களுக்கு குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் இலவசமாக நுழையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

‘Museums Uniting a Divided World’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த முன்னெடுப்பு, கலை, வரலாறு மற்றும் அனுபவங்கள் மூலம் கலாச்சாரப் புரிதலை ஊக்குவிப்பதையும் சமூகங்களை ஒன்றிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘Abu Dhabi Culture’ இணையதளத்தின் படி, பார்வையாளர்கள், சாதியாத் கல்ச்சுரல் டிஸ்ட்ரிக்ட் (Saadiyat Cultural District), அல்அய்ன் மற்றும் டெல்மா ஐலேண்ட் உள்ளிட்ட எமிரேட் முழுவதும் உள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம். இங்கு வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள், நேரடி நிகழ்ச்சிகள் முதல் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான செய்முறைப் பயிற்சிகள் (workshops) வரையிலான செயல்பாடுகள் உள்ளன.

ADVERTISEMENT

அபுதாபி நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் (Natural History Museum Abu Dhabi), குடும்பங்கள் அறிவியல் மற்றும் படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளில் பங்கேற்கலாம். இதில் சிறு கண்காட்சிகளை உருவாக்குதல், இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி சூரிய அச்சுப் பதித்தல், ஒளி சோதனைகள் மற்றும் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட கைவினை ஒர்க் ஷாப் ஆகியவை அடங்கும்.

இதற்கிடையில், லூவர் அபுதாபி (Louvre Abu Dhabi) அதன் நிரந்தரக் காட்சியகங்கள் மற்றும் பிக்காசோ கண்காட்சிக்கு (Picasso Exhibition) இலவச வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களையும், நாள் முழுவதும் குழந்தைகளுக்கான இலவச ஒர்க் ஷாப்களையும் வழங்கும்.

ADVERTISEMENT

அதேபோல், சையத் தேசிய அருங்காட்சியகத்திற்கு (Zayed National Museum) வருகை தரும் பார்வையாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டாடும் விதமாக, கதை சொல்லும் அமர்வுகள், பாரம்பரிய நிகழ்ச்சிகள், கைக்காப்பு செய்யும் ஒர்க் ஷாப் மற்றும் குடும்பப் புதையல் வேட்டைகளில் (family scavenger hunt) பங்கேற்று மகிழலாம்.

மேற்கூறிய அருங்காட்சியகங்களுடன் பங்கேற்கும் மற்ற இடங்களில் கஸ்ர் அல் ஹொஸ்ன், கலாச்சார அறக்கட்டளை, மனரத் அல் சாதியாத், அல் அய்ன் அருங்காட்சியகம் மற்றும் டெல்மா அருங்காட்சியகம் ஆகியவை அடங்கும்.

குறிப்பாக, அல் அய்னில் உள்ள அல் ஜஹிலி கோட்டை மற்றும் அல் அய்ன் பாலைவனச் சோலை உள்ளிட்ட கலாச்சாரத் தளங்களில், பாரம்பரியப் பாதுகாப்பு மற்றும் அமீரகத்தின் வரலாற்றை மையமாகக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அபுதாபி நூலகங்கள் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்காக கதை சொல்லும் அமர்வுகள், படைப்பாற்றல் ஒர்க் ஷாப் மற்றும் சிறப்பு செயல்பாடுகளை நடத்தவுள்ளது.

இந்த மூன்று நாள் கொண்டாட்டத்தின் போது அதிக வருகை எதிர்பார்க்கப்படுவதால், தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு அதிகாரிகள் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel