நேற்று (மே 17, ஞாயிற்றுக்கிழமை) அபுதாபியின் அல் தஃப்ரா பகுதியில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்திற்கு (Barakah Nuclear Power Plant) வெளியே இருந்த மின்சார ஜெனரேட்டரை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ட்ரோன் தாக்குதலை நடத்தியது யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணவில்லை என்றும் அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குவைத், ஜோர்டான், சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் இந்த சம்பவத்தைக் கண்டித்ததோடு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வலுவான ஆதரவை தெரிவித்துள்ளன. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் இறையாண்மையின் கடுமையான மீறல் என்றும், முக்கிய உள்கட்டமைப்பைக் குறிவைக்கும் அபாயகரமான பதற்ற அதிகரிப்பு என்றும் அந்நாடுகள் வெளியிட்ட அறிக்கைகளில் விவரித்த்துள்ளன.
மே 17 அன்று மேற்கு எல்லை வழியாக நாட்டிற்குள் நுழைந்த மூன்று ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலின் போது, இரண்டு ட்ரோன்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன, மூன்றாவது ட்ரோன் பரக்கா அணுமின் நிலையத்தின் உள் சுற்றுச்சுவருக்கு வெளியே அமைந்திருந்த மின்சார ஜெனரேட்டரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், கதிரியக்கப் பாதுகாப்பு நிலைகளில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலை ஐக்கிய அரபு அமீரகத்தின் இறையாண்மை மீதான அப்பட்டமான மீறல் என்று குவைத் கூறியதுடன், அமைதியான அணுசக்தி நிலையங்களைத் தாக்குவது பொதுமக்கள், சுற்றுச்சூழல் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளது. ஜோர்டானும் இந்தத் தாக்குதலைக் கண்டித்ததுடன், இது அமீரகத்தின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்று கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், சவூதி அரேபியா இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்ததுடன், ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தனது முழுமையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில், பஹ்ரைன் அபுதாபியின் வான் பாதுகாப்புப் படைகளின் தொழில்முறைத் திறனைப் பாராட்டியதுடன், இதுபோன்ற தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
ட்ரோன்களின் மூலத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் கூறியதுடன், தனது பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைக் குறிவைக்கும் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள நாடு முழுமையாகத் தயாராக உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், சில பிராந்திய அறிக்கைகள் மற்றும் ஆன்லைன் விவாதங்கள், குறிப்பாக பரந்த பிராந்திய மோதல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் சமீபத்திய தாக்குதல்களுக்கு மத்தியில், ஈரான் ஆதரவு குழுக்கள் சம்பந்தப்பட்ட பதட்டங்களுடன் இந்த சம்பவத்தை தொடர்புபடுத்தியுள்ளன. இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, எந்தவொரு நாடோ அல்லது அமைப்போ அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை, மேலும் ஐக்கிய அரபு அமீரகம் எந்தவொரு குறிப்பிட்ட தரப்பையும் பகிரங்கமாக குற்றம் சாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பரக்கா அணுமின் நிலையம், ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது மற்றும் நாட்டின் தூய்மையான எரிசக்தி இலக்குகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel