ADVERTISEMENT

துபாயில் கடந்த 3 மூன்று மாதங்களில் பார்க்கிங் அபராதங்கள் 32% அதிகரித்துள்ளதாக பார்க்கின் நிறுவனம் அறிவிப்பு!!

Published: 7 May 2026, 8:39 PM |
Updated: 7 May 2026, 8:39 PM |
Posted By: Menaka

துபாயின் மிகப்பெரிய கட்டண பொது பார்க்கிங் ஆப்பரேட்டரான பார்க்கின் (Parkin) நிறுவனமானது எமிரேட் முழுவதும் உள்ள மால்கள், பொது இடங்கள் என தனது பார்க்கிங் வலையமைப்பை விரிவுபடுத்தி, மேம்பட்ட அமலாக்கத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதால், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் அந்நிறுவனம் விதித்த பார்க்கிங் அபராதங்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்து 754,300-ஆக உயர்ந்துள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 32% அதிகரிப்பாகும்.

ADVERTISEMENT

நிறுவனத்தின் சமீபத்திய காலாண்டு முடிவுகளின்படி:

  • ஜனவரி: 280,000 அபராதங்கள்
  • பிப்ரவரி: 253,000 அபராதங்கள்
  • மார்ச்: 221,000 அபராதங்கள்

தனது பார்க்கிங் வசதிகளின் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மேம்படுத்தப்பட்ட அமலாக்க அமைப்புகளே இந்த உயர்வுக்குக் காரணம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக கடந்த பிப்ரவரியில், பார்க்கின் நிறுவனம் தனது ஒரு ஆய்வு வாகனத்தில் பொருத்தப்பட்ட புதிய ஸ்மார்ட் ஸ்கேன் கேமரா அமைப்பைச் (roof-mounted scan camera system) சோதிக்கத் தொடங்கியது. இந்தத் தொழில்நுட்பம், ஆய்வாளர்கள் கால்நடையாக ரோந்து செல்லத் தேவையின்றி, நெரிசலான பகுதிகளில் வாகனங்களைக் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக துபாயின் கடுமையான கோடை வெப்பத்தின் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில்:

ADVERTISEMENT
  • களக் குழுக்கள் 10.2 மில்லியன் வாகனப் பதிவு எண்களை ஸ்கேன் செய்தன
  • ஸ்மார்ட் ஸ்கேன் கேமராக்கள் 20.6 மில்லியன் பதிவு எண்களை ஸ்கேன் செய்தன

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட 12.5 மில்லியன் எண்களிலிருந்து 64 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது. இது வாகனக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஆண்டுக்கு ஆண்டு ஏற்பட்ட பெரும் அதிகரிப்பைக் குறிக்கிறது.

வருவாய் மற்றும் லாபத்தில் பெரும் ஏற்றம்

மேலும், பார்க்கினின் அமலாக்க வருவாய் 46% உயர்ந்து 119.7 மில்லியன் திர்ஹம்ஸ் அதிகரித்தது, அதே நேரத்தில் ஜனவரி-மார்ச் 2026 காலகட்டத்தில் ஒட்டுமொத்த வருவாய் 41% அதிகரித்து Dh384.2 மில்லியன் திர்ஹம்ஸ் ஆக உயர்ந்தது.

அதேபோல், நிறுவனத்தின் நிகர லாபமும் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 36% அதிகரித்து, 185.1 மில்லியன் திர்ஹம்ஸ் என்ற சாதனை அளவை எட்டியது.

அபராதம் வசூலிக்கும் விகிதம் Q1 2025-ல் 85% ஆக இருந்த நிலையில், தற்போது 88% ஆக மேம்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

துபாய் முழுவதும் பார்க்கினால் நிர்வகிக்கப்படும் மொத்த பார்க்கிங் மண்டலங்களின் எண்ணிக்கை 23% அதிகரித்து 258,000 இடங்களாக உயர்ந்துள்ளது.

பொது பார்க்கிங் இடங்கள் மட்டும் 195,000-க்கும் அதிகமாக வளர்ந்துள்ளன, அதே நேரத்தில் டெவலப்பர்களால் நிர்வகிக்கப்படும் பார்க்கிங் இடங்கள் புதிய சேர்க்கைகளில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈத் பண்டிகைக் காலத்தில் பார்க்கிங் பயன்பாடு குறைந்திருந்த போதிலும் மற்றும் பிராந்தியப் புவிசார் அரசியல் பதட்டங்கள் இருந்தபோதிலும், நீண்டகால வளர்ச்சி குறித்து நிறுவனம் நம்பிக்கையுடன் இருப்பதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது அப்துல்லா அல் அலி கூறியுள்ளார்.

முதல் மூன்று மாதங்களுக்கான முடிவுகளைத் தொடர்ந்து பார்க்கின், தனது முழு ஆண்டிற்கான கண்ணோட்டத்தை மறுஆய்வு செய்து, ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படவுள்ள 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளுடன் சேர்த்து, புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel