துபாயின் மிகப்பெரிய பொது பார்க்கிங் நிறுவனங்கள் தற்பொழுது 5% மதிப்பு கூட்டப்பட்ட வரியை அறிமுகப்படுத்தியுள்ளன. துபாயின் போது பார்க்கிங் நிறுவனமான பார்க்கின் (Parkin), வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி முதல் அதன் அனைத்து பார்க்கிங் சேவைகளுக்கும் 5 சதவீத மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த மதிப்புக்கூட்டு வரி பின்வருவனவற்றிற்குப் பொருந்தும்:
- சாலையோர பார்க்கிங் (On-street parking)
- சாலையோரமற்ற பார்க்கிங் (Off-street parking)
- பருவகால பார்க்கிங் அட்டைகள் (Seasonal parking cards)
- பார்க்கிங் அனுமதிச் சீட்டுகள் (Parking permits)
- பார்க்கிங் முன்பதிவுகள் (Parking reservations)
சம்பந்தப்பட்ட ஐக்கிய அரபு அமீரக அரசாங்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மற்றும் நாட்டில் பொருந்தக்கூடிய வரி விதிமுறைகளுக்கு இணங்கவே இந்த முடிவு செயல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய மதிப்புக்கூட்டு வரி அமலாக்கத்தின் காரணமாக, அடுத்த மாதம் முதல் துபாய் முழுவதும் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் வாகன நிறுத்துமிடம் தொடர்பான செலவுகளில் ஒரு சிறிய அதிகரிப்பைக் காணலாம்.
ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில், துபாயின் பார்க்கிங் கட்டண முறை மற்றும் பருவக்கால அட்டைகளின் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்யுமாறு கோரி, ‘Parkin’ நிறுவனம் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்திடம் (RTA) ஒரு முன்மொழிவைச் சமர்ப்பித்திருந்தது. இந்த மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், துபாய் முழுவதும் உள்ள பொது பார்க்கிங் இடங்களின் சராசரி கட்டணம் மேலும் உயரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முன்மொழிவை இறுதி ஒப்புதலுக்காக துபாயின் நிர்வாகக் குழுவிற்கு (Executive Council) அனுப்புவதற்கு முன்னதாக, RTA அதைத் தற்போது ஆய்வு செய்து வருவதாக ‘Parkin’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் 2025-இல் ‘மாறுபடும் கட்டண முறை’ அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, துபாயில் ஒரு மணி நேரத்திற்கான சராசரி பார்க்கிங் கட்டணம் கணிசமாக உயர்ந்தது. மேலும் 2026-ஆம் ஆண்டில், தனது வாகன நிறுத்த வசதிகளை 5,500 முதல் 7,500 இடங்கள் வரை விரிவுபடுத்த பார்க்கின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டில் 524.5 மில்லியன் திர்ஹம்ஸ் வருவாய் ஈட்டியிருந்த நிலையில், இந்த ஆண்டில் பார்க்கிங் சேவைகள் மூலம் 560 மில்லியன் திர்ஹம்ஸ் முதல் 610 மில்லியன் திர்ஹம்ஸ் வரை வருவாய் ஈட்ட முடியும் என்று அந்நிறுவனம் கணித்துள்ளது.
சாலிக் 5% மதிப்புக்கூட்டு வரியையும் (VAT) அறிவிக்கிறது
இதற்கிடையில், ஜூன் 1, 2026 முதல் சாலிக் டோல் கட்டணங்கள் மற்றும் வாகன அடையாள அட்டை செயல்படுத்தும் கட்டணங்கள் மீது 5 சதவீத மதிப்புக்கூட்டு வரியை (VAT) அமல்படுத்தப் போவதாக சாலிக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக நிறுவனம் பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளது:
- தற்போதுள்ள டோல் கட்டணங்கள் மாற்றமின்றி இருக்கும்
- ஐக்கிய அரபு அமீரக சட்டத்தின்படி தேவைப்படும் மதிப்புக்கூட்டு வரி (VAT) மட்டும் சேர்க்கப்படும்
- வசூலிக்கப்பட்ட மதிப்புக்கூட்டு வரி, மத்திய வரி ஆணையத்திடம் (Federal Tax Authority) செலுத்தப்படும்
இந்த மதிப்புக்கூட்டு வரி அமலாக்கம் நிறுவனத்தின் இலாபத்தன்மையையோ அல்லது நிதி நிலையையோ பாதிக்காது என்றும் சாலிக் மேலும் கூறியுள்ளது.
மேலும், ஜூலை 1, 2022 முதல் மே 31, 2026 வரையிலான காலத்திற்கான மதிப்புக்கூட்டு வரித் தொகைகள் பிராந்திய வரி ஆணையத்தால் (RTA) முழுமையாக ஈடுசெய்யப்படும் என்றும், இதன்மூலம் வணிகத்தில் பின்னோக்கிய நிதிப் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel