2026ம் ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிஹாட் ரயிலின் முதல் பயணிகள் நிலையமானது ஃபுஜைராவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அமீரகத்தின் பயணிகள் ரயில் திட்டம் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஃபுஜைராவின் ஆட்சியாளருமான ஷேக் ஹமாத் பின் முகமது அல் ஷர்கி, ஃபுஜைராவின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஹமாத் அல் ஷர்கி மற்றும் எதிஹாட் ரெயில் தலைவர் ஷேக் தையிப் பின் முகமது பின் சையத் அல் நஹ்யான் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், இந்த நிலையத்தைச் சுற்றிப் பார்த்ததுடன், ஃபுஜைராவிலிருந்து பத்னாவிற்கு (Bathna) ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
மேலும், அங்கிருந்த அதிகாரிகள் பயணிகள் நிலையத்தின் வசதிகள், விரிவான ரயில் வலையமைப்பின் முன்னேற்றம் மற்றும் பயணிகள் சேவைகளை படிப்படியாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவது குறித்து அவர்களுக்கு விரிவாக விளக்கினர்.
நவீன வடிவமைப்பு மற்றும் ஸ்மார்ட் அம்சங்கள்
இந்த நிலையத்தின் உட்புற வடிவமைப்பைப் பொறுத்தவரை, கிரீம் மற்றும் சாம்பல் நிற டோன்கள், பெரிய கண்ணாடித் தகடுகள் மற்றும் நவீன அலங்காரங்களுடன் கட்டப்பட்டுள்ள பயணிகள் ரயில் நிலையத்தின் நவீன கட்டமைப்பு மட்டுமின்றி, பார்வையாளர்களுக்கு பின்வரும் மேம்பட்ட வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது:
- ஸ்மார்ட் டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள்
- QR குறியீடு மூலம் நடைமேடைகளை அணுகுதல்
- அச்சிடப்பட்ட மற்றும் டிஜிட்டல் டிக்கெட் தேர்வுகள்
- தொடுதிரை மூலம் தகவல்களை வழங்கும் ஒரு ரோபோ அசிஸ்டன்ட்
2026 முதல் பயணிகள் சேவைகள்
எதிஹாட் ரயிலின் மூத்த அதிகாரி ஒருவர், பயணிகள் சேவைகள் 2026-ல் ஒவ்வொரு கட்டங்களாகத் தொடங்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். அவரது கூற்றுப்படி, முதல் கட்டத்தில், அபுதாபி, துபாய் மற்றும் ஃபுஜைரா ஆகிய எமிரேட்கள் இணைக்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், முழுமையாக நிறைவடைந்ததும், இந்த வலையமைப்பு ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள 11 முக்கிய நகரங்களையும் பிராந்தியங்களையும் இணைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அமீரகங்கள் முழுவதும் வேகமான பயணம்
பயணிகள் ரயில் சேவை பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:
- அபுதாபியிலிருந்து ஃபுஜைரா: ~1.40 மணி நேரங்கள் (சாலை வழியாக பயணிக்க 2.30 மணி நேரத்திற்கும் மேல் ஆகும்)
- அபுதாபியிலிருந்து ருவைஸ்: 1.10 மணி நேரங்கள் (சாலை வழியாக பயணிக்க 2்மணி நேரத்திற்கும் மேல் ஆகும்)
- அபுதாபியிலிருந்து துபாய்: 57 நிமிடங்கள் (சாலை வழியாக பயணிக்க 1.30 மணி நேரங்கள் ஆகும்)
இந்த பயணிகள் ரயில்கள் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் மற்றும் சுமார் 400 பயணிகளை ஏற்றிச் செல்லும். இதில் பிசினஸ் மற்றும் எகானமி வகுப்பு தேர்வுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டம், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் போக்குவரத்தை மாற்றுவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்குவதுடன், சாலைப் பயணத்திற்கு வேகமான மற்றும் திறமையான ஒரு மாற்று வழியையும் வழங்குகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel