ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நடந்த பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு இலகுரக வாகனங்களே காரணமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
விபத்து புள்ளிவிபரம்:
மற்ற பிரிவுகளை விட, இலகுரக வாகனங்கள் 3,834 விபத்துகளுடன் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தன. அவற்றிலும், குறிப்பாக, மோட்டார் சைக்கிள்கள் 1,224 சம்பவங்களுடன் அடுத்த இடத்திலும், அதைத் தொடர்ந்து கனரக லாரிகள் 325 சம்பவங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. சிறிய பங்குகளில் மிதிவண்டிகள் (158), கனரக பேருந்துகள் (131), இ-ஸ்கூட்டர்கள் (120), இலகுரக பேருந்துகள் (115) மற்றும் இ-பைக்குகள் (62) ஆகியவை அடங்கும். ஒரு சில சம்பவங்களில் இயந்திர உபகரணங்கள் மற்றும் பிற வாகன வகைகள் சம்பந்தப்பட்டிருந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் 6,014 விபத்துகளை பதிவு செய்தது. பெரும்பாலானவை வாகன மோதல்கள் (4,085), அதே சமயம் 1,102 பாதசாரிகள் சம்பந்தப்பட்டவை மற்றும் 800 வாகனங்கள் கவிழ்ந்த சம்பவங்கள் என்று கூறப்படுகிறது.
முக்கிய காரணங்கள்
கூடுதலாக, இந்த விபத்துகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களையும் இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றில், சாலைகளில் திடீரெனத் திசை திருப்புதல் முதன்மைக் காரணமாக இருப்பதையும் அமைச்சகம் சுட்டிக்காட்டியது, இது 1,074 விபத்துக்களுடன் தொடர்புடையது. மற்ற முக்கிய காரணிகள் பின்வருமாறு:
- ஓட்டுநரின் கவனச்சிதறல் – 948 வழக்குகள்
- பாதுகாப்பான தூரத்தைக் கடைப்பிடிக்கத் தவறுதல் – 849 வழக்குகள்
- அலட்சியம்/கவனக்குறைவு – 661 வழக்குகள்
இவை மட்டுமின்றி, பாதுகாப்பற்ற முறையில் முந்திச் செல்வது மற்றும் அதிவேகமாகச் செல்வது முதல் டயர் வெடிப்புகள் மற்றும் பாதசாரிகளின் முன்னுரிமையைப் புறக்கணிப்பது வரை 160-க்கும் மேற்பட்ட பங்களிப்புக் காரணிகள் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel