ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள நுகர்வோர் கோழிக்கறிப் பொருட்களின் தரம், உற்பத்தி செய்யப்படும் இடம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகள் மீது அதிக கவனம் செலுத்தி வருவதால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோழி இறைச்சியின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்த அதிகாரிகளும் சில்லறை விற்பனையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் “Premium Mark” என்ற புதிய சான்றிதழ் திட்டம், ஜூன் 2026 முதல் குளிரூட்டப்பட்ட கோழிக்கறிப் பாக்கெட்களில் (chilled chicken meat) இடம்பெறத் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, தரமான உணவு மற்றும் பாதுகாப்புத் தேவைகளை விட மேம்பட்ட, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோழிக்கறியை வாடிக்கையாளர்கள் எளிதில் அடையாளம் காண உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரீமியம் உணவு முத்திரை என்றால் என்ன?
இந்தத் திட்டம் அபுதாபி தரம் மற்றும் இணக்கக் கவுன்சிலால் (ADQCC) தொடங்கப்பட்டது. அந்த வகையில், “பிரீமியம் மார்க்” சான்றிதழ், பின்வரும் அம்சங்களில் மேம்பட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் கோழிப் பொருட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதை கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது:
- பண்ணை வளர்ப்பு முறைகள்
- தீவனத் தரம்
- உணவுப் பாதுகாப்பு
- நிலைத்தன்மை
- ஆய்வு மற்றும் சோதனை
- பேக்கேஜிங் மற்றும் இறுதித் தயாரிப்பின் தரம்
இந்த முத்திரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்தர கோழிப் பொருட்களை பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் நேரடியாக அடையாளம் காண நுகர்வோருக்குத் தெளிவான மற்றும் நம்பகமான வழியை வழங்கும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தச் சான்றிதழ் திட்டம், ஜூன் 2026 முதல் பல கட்டங்களாகத் தொடங்கப்படும். ஆரம்பத்தில், அபுதாபியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கோழி உற்பத்தியாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பங்கேற்பது விருப்பத்திற்குட்பட்டது என்றாலும், சான்றிதழைத் தக்க வைத்துக் கொள்ள, உற்பத்தியாளர்கள் கடுமையான இணக்கச் சோதனைகள், ஆய்வுகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
ADQCC-இன் படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய கோழி விநியோகத்தில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை அபுதாபி தற்போது உற்பத்தி செய்கிறது.
இதற்கிடையில், உள்ளூர் உயர்தரப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதாக சில்லறை விற்பனையாளர்கள் கருதுகின்றனர். மேலும், வாடிக்கையாளர்கள் கோழிப் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன, உற்பத்தித் தரங்கள், உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நிலைத்தன்மை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகளவில் கேள்விகள் கேட்பதாக லுலு குரூப் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நம்பகமான சான்றிதழ்கள் மற்றும் அரசாங்க ஆதரவு பெற்ற தர முத்திரைகள் குறித்து வாடிக்கையாளர்கள் அதிக விழிப்புணர்வு பெற்று வருவதாகவும் லுலு இறைச்சி மற்றும் கோழிப் பிரிவு இயக்குநர் ரியாத் ஜப்பார் கூறியுள்ளார்.
அந்த வகையில், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் கோழி இறைச்சியின் மீதான நம்பிக்கையை இந்த முயற்சி மேலும் வலுப்படுத்தும் என்றும், ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் உயர்தர பிராண்டுகளுடன் போட்டியிட உதவும் என்றும் சில்லறை விற்பனையாளர்கள் நம்புகின்றனர்.
உற்பத்தியாளர்கள் வரவேற்பு
புதிய திட்டத்தில் உள்ள பல தரநிலைகள் ஏற்கனவே இருக்கும் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே உள்ளன என்று கூறி, அல் அய்ன் ஃபார்ம்ஸ் குழுமமும் இந்த முயற்சியை வரவேற்றுள்ளது.
விலங்கு நலன், நவீன உற்பத்தி முறைகள், மற்றும் பொறுப்பான பேக்கேஜிங் மற்றும் விநியோகம் ஆகியவை ஐக்கிய அரபு அமீரக கோழி உற்பத்தியாளர்களுக்கு நீண்டகாலமாக முன்னுரிமைகளாக இருந்து வருகின்றன என்றும் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தச் சான்றிதழ் ஐக்கிய அரபு அமீரக கோழிப் பொருட்களின் உலகளாவிய பிம்பத்தையும் போட்டித்தன்மையையும் மேம்படுத்தும் என்று தொழில்துறைத் தலைவர்கள் நம்புகின்றனர்.ம்
அதுமட்டுமின்றி, குறைந்தபட்ச ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு அப்பாற்பட்ட தயாரிப்புகளை அங்கீகரிப்பதால், பிரீமியம் உணவு முத்திரையானது தற்போதுள்ள எமிரேட்ஸ் தர முத்திரையிலிருந்து வேறுபடுகிறது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
தற்போதைய கட்டம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட கோழிக்கறியில் கவனம் செலுத்தினாலும், எதிர்காலக் கட்டங்களில் இந்தக் கட்டமைப்பை விரிவுபடுத்தி முட்டை, சிவப்பு இறைச்சி மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட கூடுதல் உணவு வகைகளைச் சேர்க்கலாம் என்று ADQCC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முயற்சி, அபுதாபியின் உணவு உற்பத்தியை “உயர்தரமானது, நம்பகமானது மற்றும் சர்வதேச அளவில் போட்டித்தன்மை வாய்ந்தது” என்ற நற்பெயரை வலுப்படுத்துவதன் மூலம், இறுதியில் ஏற்றுமதி இலக்குகளுக்கு ஆதரவளிக்கக்கூடும் என்றும் அந்த ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
“இந்தக் கட்டத்தில் ஏற்றுமதி வளர்ச்சி இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாக இல்லாவிட்டாலும், இந்த முயற்சி சர்வதேச அளவில் இணக்கமான தர உள்கட்டமைப்பை உருவாக்க உதவுகிறது மற்றும் மேம்பட்ட தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு இணங்குவதை நிரூபிக்கிறது” என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel