ஐக்கிய அரபு அமீரக மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) ஏற்பாடு செய்திருந்த நாடு தழுவிய முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, அமீரகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நடன நிகழ்ச்சிகள், நேரடி இசை, விளையாட்டுகள் மற்றும் குலுக்கல் போட்டிகள் நிறைந்த வண்ணமயமான கொண்டாட்டங்களுடன் ஈத் அல் அதா பண்டிகையைக் கொண்டாடியுள்ளனர்.
‘Our Workers’ Happiness, the Joy of Our Eid’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வுகள், நாடு முழுவதும் உள்ள 30 இடங்களில் இடம்பெற்றன. இது தொழிலாளர்கள் தங்கள் சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பண்டிகைக் காலச் சூழலை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது.
MoHRE சமூக ஊடகங்களில் பகிர்ந்த இது தொடர்பான வீடியோக்களில், தொழிலாளர்கள் பிரபலமான பாடல்களுக்கு நடனமாடுவதும், மேடை விளையாட்டுகள் மற்றும் கயிறு இழுக்கும் போட்டிகளில் பங்கேற்பதும், குலுக்கல் போட்டிகள் மூலம் ஷாப்பிங் வவுச்சர்கள் மற்றும் மொபைல் உள்ளிட்ட பரிசுகளை வெல்வதும் காணப்பட்டது.
இந்தக் கொண்டாட்டங்கள் தொழிலாளர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்துவதையும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும், தொழிலாளர் சமூகத்திற்குள் சமூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், ஈத் பண்டிகை நிகழ்வுகளுக்காகத் தொழிலாளர்களைப் பதிவு செய்யுமாறு தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் தங்குமிடங்களுக்கு MoHRE அழைப்பு விடுத்திருந்தது. மேலும், தொழிலாளர்களின் பரவலான பங்கேற்பை உறுதி செய்யும் வகையில், இட அமைவிடம் மற்றும் நேரத்தின் அடிப்படையில் நிகழ்விடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பல நிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்புணர்வு முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக, அமைச்சகத்தின் இத்திட்டத்துடன் இணைந்து கூடுதல் செயல்பாடுகளையும் ஏற்பாடு செய்திருந்தன.
உள்துறை அமைச்சகம், அமீரகம் முழுவதும் உள்ள காவல் துறைகள், நகராட்சிகள், AD Ports குழுமம் மற்றும் துபாயில் உள்ள அடையாள மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய மற்றும் உள்ளூர் அரசு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்தக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர்களுடனான ஈடுபாட்டை வலுப்படுத்துவதிலும், நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்கை அங்கீகரிப்பதிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் முயற்சிகளை இந்த முன்னெடுப்பு பிரதிபலிப்பதாக மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து MoHRE-இன் ஆய்வு மற்றும் இணக்கப் பிரிவின் உதவிச் செயலாளர் மொஹ்சின் அல் நாஸி என்பவர் பேசுகையில், தொழிலாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் சந்தைக்கும், அதன் வளர்ச்சிப் பயணத்திற்கும் ஒரு முக்கியத் தூணாகத் திகழ்வதாகதெரிவித்துள்ளார். அதேவேளையில், பண்டிகைக் காலங்களில் தொழிலாளர்களைச் சிறப்பித்துக் கொண்டாடுவது, நாடு முழுவதும் அவர்களின் மன உறுதியையும், நல்வாழ்வையும், பணியிட நிலைத்தன்மையையும் மேம்படுத்த உதவுவதாகத் தொழிலாளர் பாதுகாப்புப் பிரிவின் உதவிச் செயலாளர் தலால் அல்ஷெஹி கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel