ADVERTISEMENT

சாலைப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் துபாய் காவல்துறை: வாகன ஓட்டிகளுக்கு 2 கார் வெல்லும் வாய்ப்பு!

Published: 20 Jun 2026, 8:24 PM |
Updated: 20 Jun 2026, 8:38 PM |
Posted By: Menaka

துபாய் காவல்துறையானது, அமீரகம் முழுவதும் பொறுப்பான ஓட்டுநர் பழக்கங்களை ஊக்குவிக்கவும், போக்குவரத்து விபத்துக்களைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய சாலைப் பாதுகாப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், ஒரு விழிப்புணர்வுப் போட்டியின் மூலம் கார் வெல்லும் வாய்ப்பையும் வாகன ஓட்டிகளுக்கு வழங்குகிறது.

ADVERTISEMENT

தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட “விழிப்புணர்வோடு ஓட்டுங்கள்” (Drive with Awareness) என்ற இந்தப் பிரச்சாரம், வாகனங்களை நெருக்கமாகப் பின்தொடர்தல், திடீரெனப் பாதை மாறுதல், அதிவேகம், கவனச்சிதறலுடன் வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துதல், பாதை ஒழுக்க மீறல்கள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தும் பழக்கங்கள் உள்ளிட்ட சாலை விபத்துக்களுக்கான சில முக்கிய காரணங்களைப் பற்றி ஓட்டுநர்களுக்குக் கல்வி கற்பிப்பதில் கவனம் செலுத்தும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துபாய் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் பிரச்சாரப் பங்காளிகள் கலந்துகொண்ட ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது இந்த முயற்சி வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

இது குறித்து போக்குவரத்து பொதுத் துறையின் துணை இயக்குநர் பிரிகேடியர் எஸாம் அல் அவார் பேசுகையில், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்குவதை ஊக்குவிப்பதற்கும் துபாய் காவல்துறை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பிரச்சாரம் அமைகிறது என்று எடுத்துரைத்துள்ளார்.

மேலும், அமலாக்க நடவடிக்கைகள், நவீன சட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுடன், விபத்துகள், காயங்கள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைப்பதில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய அவர், “சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் மற்றும் பாதுகாப்பான, மேலும் நீடித்த சாலைகளை உருவாக்கும் அமீரகத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கும் தாக்கமிக்க முன்னெடுப்புகளை உருவாக்குவதில் துபாய் காவல்துறை உறுதியாக உள்ளது,” என்று வெளிப்படுத்தியுள்ளார்.

இரண்டு கார்களை வெல்லும் வாய்ப்பு

இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, துபாய் காவல்துறை தனது சமூக ஊடகத் தளங்களில் இரண்டு வார கால ஊடாடும் போட்டியைத் (interactive competition) தொடங்கியுள்ளது.

முதல் லெப்டினன்ட் சல்மா அல் மர்ரியின் கூற்றுப்படி, பங்கேற்பாளர்கள் போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள். தவறான பதில்களுக்குக் கல்விசார் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும், இது வாகன ஓட்டிகள் பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகள் குறித்த தங்கள் புரிதலை மேம்படுத்த உதவும்.

அதையடுத்து, பங்கேற்பாளர்கள் இரண்டு வாகனங்களில் ஒன்றை வெல்லும் வாய்ப்புக்கான டிராவில் சேர்க்கப்படுவார்கள் என்று அந்த அதிகாரி விவரித்துள்ளார்.

சாலை விபத்து மரணங்கள்

2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் துபாயில் சாலை விபத்து மரணங்கள் 19 சதவீதம் குறைந்துள்ளதாக கர்னல் தலால் அப்துல்அஜிஸ் அல் மன்சூரி தெரிவித்தார்.

திறன்மிகு கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள், அமலாக்க முயற்சிகள் மற்றும் பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு விரிவான சாலைப் பாதுகாப்பு உத்தியே இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விபத்துகளுக்கான முக்கிய காரணங்கள்

துபாய் காவல்துறை தரவுகளின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில்:

  • திடீரென பாதையை விட்டு விலகியதால் 1,928 விபத்துக்கள் ஏற்பட்டன.
  • போதுமான இடைவெளி இல்லாமல் வாகனத்தை நெருக்கமாகப் பின்தொடர்ந்ததால் 1,529 விபத்துக்கள் ஏற்பட்டன.
  • அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் 46 விபத்துக்கள் ஏற்பட்டன.

இந்த புள்ளிவிவரங்கள், ஓட்டுநர்களிடையே அதிக விழிப்புணர்வையும், போக்குவரத்து விதிகளை கடுமையாகப் பின்பற்றுவதையும் வலியுறுத்துகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், சாலைப் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு என்றும், உயிர்களைப் பாதுகாப்பதற்கான மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாக பொறுப்பான ஓட்டுநர் நடத்தை உள்ளது என்றும் துபாய் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இந்த பிரச்சாரம் சமூக ஊடக தளங்கள் மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் முழுவதும் முன்னெடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, இதன் நோக்கம், பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதும், அமீரகம் முழுவதும் பாதுகாப்பான ஓட்டுநர் பழக்கங்களை ஊக்குவிப்பதும் ஆகும்.

கல்வி சார்ந்த முயற்சிகள், வலுவான அமலாக்கம் மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம், துபாய் காவல்துறை விபத்துக்களைத் தொடர்ந்து குறைத்து, துபாயின் சாலைகளை குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றும் என நம்புகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel