துபாயின் எமிரேட்ஸ் சாலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நெடுஞ்சாலையின் நடுவில் நின்றிருந்த லாரி மீது திடீரென மினிபஸ் மோதியதில், ஒன்பது பேர் காயமடைந்த நிலையில், ஏழு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துபாய் காவல்துறையின்படி, முதற்கட்ட விசாரணையில், லாரி பழுதடைந்து சாலையில் நின்றிருந்தது தெரியவந்துள்ளது. மினிபஸ் ஓட்டுநர் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறியதாலும், சாலையோரத்தில் நின்றிருந்த வாகனத்தை உரிய நேரத்தில் கவனிக்காததாலும், பின்னால் இருந்து பயங்கரமான மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவசர மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், அப்பகுதியைப் பாதுகாக்கவும் போக்குவரத்து ரோந்துப் படையினர், மீட்புக் குழுக்கள் மற்றும் விபத்து விசாரணை நிபுணர்கள் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநரான பிரிகேடியர் ஜுமா சலேம் பின் சுவைதான் அவர்கள் பேசுகையில், இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததாகவும், மேலும் ஐந்து பேர் பலத்த காயங்கள் மற்றும் நான்கு பேர் மிதமான காயங்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்த அனைத்து பயணிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் நடந்ததும் உடனடியாக போக்குவரத்து அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தைச் சுற்றி வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, மீட்புப் பணிகளுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், விபத்தின் சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய நிபுணர்கள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வாகனப் பழுது, எரிபொருள் பற்றாக்குறை அல்லது டயர் செயலிழப்பு காரணமாக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து துபாய் காவல்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்தது. வாகன ஓட்டிகள் பயணம் செய்வதற்கு முன்பு தங்கள் வாகனங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மேலும், நெடுஞ்சாலைகளில் அவசரநிலைகளை எதிர்கொள்ளும் ஓட்டுநர்கள், அபாய விளக்குகளை (hazard lights) எரியவிடவும், எச்சரிக்கை முக்கோணங்களை (warning triangles) பாதுகாப்பான தூரத்தில் வைக்கவும், பயணிகளை வாகனத்திலிருந்து விலக்கி வைக்கவும், மேலும் விபத்துகளைத் தடுக்க உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம், வாகனப் பராமரிப்பு, ஓட்டுநரின் கவனம் மற்றும் அதிவேகச் சாலைகளில் பாதுகாப்பான இடைவெளியைப் பேணுவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel