ஐக்கிய அரபு அமீரகம் வானியல் ரீதியான கோடைக்காலத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையில், மக்கள் இந்த வார இறுதியில் ஆண்டின் மிக நீண்ட பகல் பொழுதையும் மிகக் குறுகிய இரவையும் அனுபவிக்கவுள்ளனர். அந்த வகையில், நாடு முழுவதும் சுமார் 14 மணிநேர பகல் நேரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 21 அன்று நிகழும் இந்த ‘கோடைக்கால அயனத் திருப்பம்’ (Summer Solstice), வட அரைக்கோளத்தில் கோடைக்காலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதையும், இப்பகுதியில் கடும் வெப்பம் நிலவும் பருவத்தின் ஆரம்பத்தையும் குறிக்கிறது.
இந்த வருடாந்திர வானியல் நிகழ்வு ஜூன் 21 அன்று ஐக்கிய அரபு அமீரக நேரப்படி மதியம் 12:25 மணிக்கு நிகழும். அப்போது சூரியன் பூமியைப் பொறுத்தவரை அதன் வடக்கே மிகத் தொலைவான நிலையை அடையும். இதன் விளைவாக ஆண்டின் மிக நீண்ட பகல் பொழுதும், மிகக் குறுகிய இரவும் ஏற்படும் என்று வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஏறக்குறைய 14 மணிநேர பகல் பொழுது
எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் தலைவர் இப்ராஹிம் அல் ஜார்வானின் கூற்றுப்படி, ஜூன் 18 முதல் 24 வரையிலான காலகட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பகல் நேரத்தின் அளவு சுமார் 13 மணிநேரம் 50 நிமிடங்களை எட்டும்.
இக்காலகட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகம் சுமார் 13 மணிநேரம் 50 நிமிடங்கள் பகல் வெளிச்சத்தைப் பெறும். மேலும், இதுவே ஆண்டின் அதிக வெளிச்சம் கொண்ட காலமாகும்.
இந்த கால கட்டத்தில், சூரியன் கடக ரேகைக்கு (Tropic of Cancer) நேர் மேலே இருக்கும். இதனால் அரேபிய தீபகற்பம் முழுவதும் நண்பகல் நேர நிழல்கள் ஆண்டிலேயே மிகக் குறுகியதாக இருக்கும்.
இந்த நிகழ்வு ஏன் நிகழ்கிறது?
பூமியின் அச்சு சுமார் 23.5 டிகிரி சாய்வாக இருப்பதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.
பூமி சூரியனைச் சுற்றி வரும்போது, இந்த காலகட்டத்தில் வடக்கு அரைக்கோளம் அதிகபட்ச சூரிய ஒளியைப் பெறுகிறது; அதே நேரத்தில் தென் அரைக்கோளம் தனது மிகக் குறுகிய நாளையும் குளிர்காலத்தின் தொடக்கத்தையும் அனுபவிக்கிறது.
இந்த நிகழ்வு ஆண்டின் மிக நீண்ட பகல் பொழுதைக் கொண்டுவந்தாலும், இதன் மூலம் உடனடியாகவே அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்று அர்த்தமல்ல. வரவிருக்கும் வாரங்களில் நிலம் மற்றும் கடல் மேற்பரப்புகள் தொடர்ந்து வெப்பத்தை உறிஞ்சுவதால், வளைகுடா பிராந்தியத்தில் வழக்கமாக அதிக வெப்பம் நிலவும் காலமான ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களின் தொடக்கத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் விளக்குகின்றனர்.
கோடைக்காலத்தின் முதல் பாதியில், அதாவது ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 10 வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பகல்நேர வெப்பநிலை 41°C முதல் 43°C வரையிலும், இரவு நேர வெப்பநிலை 27°C முதல் 31°C வரையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய நீண்ட கால வெப்ப அலைகளின் போது சில பகுதிகளில் வெப்பநிலை 50°C-க்கு மேல் செல்லக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இப்பருவத்தில் “பரா” (Barah) காற்று என்று அழைக்கப்படும் வடக்கிலிருந்து மற்றும் வடமேற்கிலிருந்து வீசக்கூடிய பலமான காற்று வீசும் என்று கூறப்படுகிறது. இவை தூசிப் புயல்களையும் மணல் காற்றையும் ஏற்படுத்தக்கூடும். இதற்கிடையில், குடியிருப்பாளர்கள் “சமூம்” காற்றுகளையும் அனுபவிக்கக்கூடும். இவை மிகவும் வெப்பமான மற்றும் வறண்ட பாலைவனக் காற்றுகளாகும், இவை ஏற்கனவே கடுமையான வானிலை நிலைகளை மேலும் தீவிரப்படுத்தக்கூடும்.
அதுமட்டுமில்லாமல், ஆகஸ்ட் மாத நடுப்பகுதி முதல் செப்டம்பர் இறுதி வரை, தென்கிழக்கு திசையிலிருந்து வீசும் “கௌஸ்” (Kous) காற்று தீவிரமடைவதால் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூடுதல் ஈரப்பதம் ஹஜர் மலைத்தொடர் (Hajar Mountains) மீது மேகங்கள் உருவாக உதவக்கூடும். இதனால் அவ்வப்போது இடியுடன் கூடிய மழையும், ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குப்பகுதிகளில் உள்ளூர் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டத்திற்கு பிறகு பகல் நேரத்தின் அளவு படிப்படியாகக் குறையத் தொடங்கினாலும், கோடைக்கால வெப்பநிலை இன்னும் சில வாரங்களுக்குத் தொடர்ந்து அதிகரிக்கும் என்று வானியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel