அமீரகத்தில் கோடைக்கால வெயிலின் தாக்கம் அதிகமாகவுள்ள நிலையில், துபாய் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஓய்வு மையங்களில் டெலிவரி ஓட்டுநர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. நீண்ட நேரம் சாலைகளில் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு ஆதரவளிப்பதையும், துபாயின் வேகமாக வளர்ந்து வரும் டெலிவரி துறையில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA), UAE ஃபுட் பேங்க் (UAE Food Bank) மற்றும் டெலிவரூ (Deliveroo) ஆகியவற்றுடன் இணைந்து, பரபரப்பான மெட்ரோ மற்றும் பேருந்து நிலையங்களில் அமைந்துள்ள 23 தற்காலிக ஓய்வு மையங்களில் தினமும் உணவை விநியோகித்து வருகிறது.
முக்கிய இடங்களில் உணவு விநியோகம்
இந்த ஓய்வு மையங்கள் கோல்ட் சூக் (Gold Souq), அல் சத்வா, அல் ஜஃபிலியா, அல் குசைஸ் மற்றும் அல் கராமா பேருந்து நிலையங்கள் மற்றும் ரஷிதியா, அல் ஃபுர்ஜன், DMCC, புர்ஜுமான், இப்ன் பதூதா மற்றும் e& மெட்ரோ நிலையங்கள் போன்ற இடங்களில் அமைந்துள்ளன.
அதிக எண்ணிக்கையிலான டெலிவரி ஓட்டுநர்கள் பயன்படுத்தும் இடங்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், உதவி மிகவும் தேவைப்படும் இடங்களில் அது கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
இது குறித்து RTA-வின் உரிமம் வழங்கும் பிரிவின் (Licensing Agency) தலைமை நிர்வாக அதிகாரி அகமது மஹ்பூப் அவர்கள் பேசுகையில், கோடைக்கால மாதங்களில் டெலிவரி ஓட்டுநர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் நலனை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மதிய நேர ஓய்வுக்கான ஆதரவு
இந்த முயற்சி ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘மதிய நேர ஓய்வு’ (Midday Break) திட்டத்திற்கும் ஆதரவளிக்கிறது. இத்திட்டம், ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை நேரடி சூரிய ஒளியில் வெளிப்புற வேலை செய்வதைத் தடை செய்கிறது.
இந்தத் தற்காலிக ஓய்வு மையங்கள், ஓட்டுநர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும், வெப்பத்திலிருந்து தப்பிக்கவும், மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கு முன் புத்துணர்ச்சி பெறவும் ஒரு இடமாக அமைகின்றன.
இது பற்றி ஐக்கிய அரபு அமீரக ஃபுட் பேங்கின் நிர்வாகக் குழுத் தலைவரான மனல் ஒபைத் பின் யாரூஃப் பேசுகையில், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் டெலிவரி தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த முயற்சி ஃபுட் பேங்கின் மனிதாபிமான நோக்கத்தை வெளிப்படுத்துவதோடு, உணவைப் பாதுகாக்கவும், வீணாவதைக் குறைக்கவும், மேலும் தானம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சவாலான கோடைக்கால மாதங்களில், டெலிவரி ஓட்டுநர்களின் நலன் மற்றும் பணிச்சூழலை மேம்படுத்துவதற்கான துபாயின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமைந்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel