துபாயில் இப்போது ‘Uber’ மூலம் முழுமையாக ஓட்டுநர் இல்லாத ரோபோடாக்சியை முன்பதிவு செய்யும் வசதியானது துவங்கப்பட்டுள்ளது. இது, தானியங்கிப் போக்குவரத்தை அன்றாடப் பயணத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கான நகரின் முயற்சியில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. பைடுவின் (Baidu) அப்பல்லோ கோ (Apollo Go) ரோபோடாக்சிகள் அதிகாரப்பூர்வமாக ஊபர் தளத்தில் இணைந்துள்ளன. இதன் மூலம், பயணிகள் நகரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஓட்டுநர் இல்லாத பயணத்தை முன்பதிவு செய்ய முடியும்.
இது தொடர்பாக வெளியான தகவலின் படி, ஆகஸ்ட் 20 முதல், துபாயில் ‘UberX’ அல்லது ‘Uber Comfort’ சேவையை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு அப்பல்லோ கோ வாகனம் ஒதுக்கப்படலாம். ஓட்டுநர் இல்லாத வாகனத்தில் பயணிக்கும் வாய்ப்பை அதிகரிக்க விரும்பும் பயணிகள், ஊபர் செயலியில் உள்ள பிரத்யேக “Autonomous” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
இச்சேவை ஆரம்பத்தில் உம் சுகீம் மற்றும் ஜுமேரா ஆகிய பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் கிடைக்கிறது. எதிர்காலத்தில் துபாயின் பிற பகுதிகளுக்கும் இதனை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரோபோ-டாக்ஸி சேவை எவ்வாறு செயல்படுகிறது?
இச்சேவை Baidu-வின் ஆறாம் தலைமுறை RT6 ரோபோ-டாக்ஸியைப் பயன்படுத்துகிறது. இது மனித ஓட்டுநர் இல்லாமலே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முழு-மின்சார வாகனமாகும்.
ஒவ்வொரு வாகனத்திலும் மூன்று பயணிகள் வரை பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், வாகனத்தைச் சுற்றியுள்ள சூழலைக் கண்காணிக்கவும், நிகழ்நேரத்தில் (real-time) சாலைகளில் பயணிக்கவும் கேமராக்கள் மற்றும் லிடார் (lidar) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
‘Uber’ மற்றும் ‘Baidu’ இடையிலான பல ஆண்டு காலக் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, ‘New Horizon Luxury Transport’ நிறுவனத்தால் இந்த வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
Uber-இன் தகவலின்படி, Apollo Go-வைப் பயன்படுத்தும் பயணிகள் பின்வருவனவற்றை எதிர்பார்க்கலாம்:
- மின்சாரத்தால் இயங்கும் RT6 வாகனங்களில் முழுமையான ஓட்டுநர் இல்லாத பயணம்
- மூன்று இருக்கைகள் கொண்ட வசதி (பயணி தன்னுடன் இருவரை அழைத்துச் செல்லலாம்)
- அகலமான பின்புற இருக்கை வசதி மற்றும் தானாக நகரும் (sliding) மின்சாரக் கதவுகள்
- நேரடி வாடிக்கையாளர் சேவை (பொதுவாக ஒரு நிமிடத்திற்குள் சேவைப் பிரதிநிதியைத் தொடர்புகொள்ளலாம்)
- தானியங்கி இயக்கத்திற்கு உதவும் பல கேமராக்கள், லிடார் மற்றும் சென்சார்கள்
- பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு நோக்கங்களுக்காக வாகனத்திற்குள் ஆடியோ மற்றும் வீடியோ பதிவு செய்யும் வசதி
துபாயின் ஓட்டுநர் இல்லாத டாக்ஸி பயணம்
துபாய் தனது வணிகரீதியான முழுமையான ஓட்டுநர் இல்லாத டாக்ஸி சேவையை மார்ச் 30, 2026 அன்று உம் சுகீம் மற்றும் ஜுமேரா பகுதிகளில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
ஆரம்பகட்ட வெளியீட்டில் பைடுவின் அப்பல்லோ கோ மற்றும் ‘WeRide’ ஆகியவற்றின் மூலம் 100 தானியங்கி டாக்ஸிகள் இயக்கப்பட்டன. பயணிகள் ஊபர் மற்றும் அந்தந்த நிறுவனங்களின் செயலிகள் மூலம் பயணங்களை முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டது.
அப்பல்லோ கோ ஆரம்பத்தில் ஜுமேரா மற்றும் உம் சுகீமின் சில பகுதிகளில் தனது சொந்த செயலி மூலம் இலவசப் பயணங்களை வழங்கியது, ஆனால் தற்போது இச்சேவை கட்டணச் சேவையாகக் கிடைக்கிறது.
துபாயின் தானியங்கி போக்குவரத்து அமைப்பு ஏற்கனவே குறிப்பிடத்தக்க செயல்பாடுகளைப் பதிவு செய்துள்ளது.
அந்தவகையில், வணிக ரீதியான சேவைகள் தொடங்கப்பட்டதிலிருந்து, ரோபோ-டாக்ஸிகள் (robotaxis) 40 லட்சம் கிலோமீட்டருக்கும் (4 மில்லியன் கி.மீ) அதிகமான தூரத்தைக் கடந்துள்ளதாகவும், 7,613 பயணிகள் பயணங்களை நிறைவு செய்துள்ளதாகவும் துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஓட்டுநரற்ற போக்குவரத்துச் சூழல் அமைப்பைத் துபாய் விரிவுபடுத்தி வருவதால், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஆனது Baidu-வின் Apollo Go, WeRide மற்றும் Pony.ai உள்ளிட்ட தானியங்கி போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
Apollo Go சேவை இப்போது Uber-உடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், Uber-இன் உலகளாவிய நெட்வொர்க் முழுவதும் ஆயிரக்கணக்கான தானியங்கி வாகனங்களைச் செயல்படுத்தும் Baidu-வின் திட்டங்களுக்குத் துபாய் ஒரு தொடக்கப் புள்ளியாகவும் அமைகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel