ADVERTISEMENT

12 வினாடிகளில் இமிக்ரேஷன் கிளியரன்ஸ்! துபாய் ஏர்போர்ட்டில் அறிமுகமான புதிய மொபைல் சேவை!!

Published: 7 Sep 2026, 5:15 PM |
Updated: 7 Sep 2026, 5:15 PM |
Posted By: admin

பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை தொடர்ந்து புகுத்தி வரும் துபாய் விமான நிலையத்தில் தற்பொழுது துபாய் விமான நிலையங்கள் வழியாகச் செல்லும் பயணிகள், இனி வழக்கமான கவுண்டரில் நிற்காமலேயே பாஸ்போர்ட் சரிபார்ப்பு நடைமுறைகளை நிறைவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகள் பயணிகளின் விவரங்களைச் சரிபார்க்க உதவும் புதிய மொபைல் சேவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதாவது ‘கிளிக் அண்ட் டிராவல்’ (Click and Travel) எனப்படும் இந்தச் சேவை, பயோமெட்ரிக் தொழில்நுட்பம், முக அங்கீகாரம், மின்னணு பாஸ்போர்ட் வாசிப்பு, தானியங்கி சோதனைகள் மற்றும் பாதுகாப்பான இணைப்பு வசதி ஆகியவற்றைப் பயன்படுத்தி, பயணிகளின் தகவல்களை விரைவாகவும் துல்லியமாகவும் சரிபார்த்து, பாஸ்போர்ட் சரிபார்ப்பு நடைமுறைகளை நேரடியாகப் பயணிகளிடமே கொண்டு செல்கிறது என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தச் செயல்முறைக்கு சுமார் 12 முதல் 15 வினாடிகள் மட்டுமே ஆகும் என்றும் இது காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், விமான நிலையத்தில் பயணிகளின் நகர்வைச் சீராக்கவும் உதவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இச்சேவை ஐக்கிய அரபு அமீரகக் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் (residents), வளைகுடா (GCC) நாடுகளின் குடிமக்கள் மற்றும் அமீரக சுற்றுலாவாசிகள் பயன்படுத்தலாம் என்றும் வருகை மற்றும் புறப்பாடு ஆகிய இரு நடைமுறைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துபாய் விமான நிலையங்களின் விமான நிலையச் சேவைகள் பிரிவின் துணை உதவி இயக்குநர் சயீத் அகமது சயீத் கூறுகையில், “இப்பொழுது நாம் நிலையான கடவுச்சீட்டு சரிபார்ப்பு முறையிலிருந்து, பயணிகளின் பயண நடைமுறைகளை நிறைவு செய்ய அவர்களிடமே நேரடியாகச் செல்லும் மொபைல் முறைக்கு மாறுகிறோம்,” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இம்முறை அதிகாரிகளுக்குப் பயணிகளின் தகவல்களை உடனடியாக அணுகும் வசதியை அளிப்பதோடு, பாதுகாப்பான நெட்வொர்க் மூலம் அதிகாரப்பூர்வத் தரவுத்தளங்களுடன் நேரடியாக இணைகிறது என கூறப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான நிலையான கவுண்டர் இல்லாமலேயே நடைமுறைகளை விரைவாக முடிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.