ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஐஃபோன் 18 மாடல், UAE முழுவதும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தம்புதிய ஐஃபோன் மாடல்களை வாங்க நீண்ட வரிசைகள், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் மொத்தமாக வாங்குபவர்கள் எனப் பலரும் கடைகளில் முண்டியடித்து வருகின்றனர்.
‘iPhone 18 Pro’ மற்றும் ‘iPhone 18 Pro Max’ ஆகியவை இன்று அமீரகத்தில் விற்பனைக்கு வந்த நிலையில், மறுவிற்பனைக்காக ஒருவர் சுமார் 5,50,000 திர்ஹம்ஸ் மதிப்பிலான 76 ஐஃபோன்களை வாங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், சில சுற்றுலாப் பயணிகள் இந்தப் புதிய மாடல்களை வாங்குவதற்காகவே பிரத்யேகமாக துபாய்க்கு விமானத்தில் வந்துள்ளனர்.
துபாயில் உள்ள சில ஐஃபோன் ஆர்வலர்களுக்கு, அறிமுக நாள் என்பது வெறும் புதிய மாடல் மொபைலை வாங்குவது மட்டுமல்ல. அது ஒரு மிகுந்த லாபத்தை அளிக்கக்கூடிய வணிகமும் ஆகும். ஆப்பிளின் புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் (Pro Max) மாடல்களுக்கு ஆரம்பக்கட்டத்திலிருந்தே நிலவும் அதிக தேவையைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் நோக்கில், துபாயைச் சேர்ந்த சிலர் டஜன் கணக்கான சாதனங்களை வாங்கியுள்ளனர்.
அவர்களில் ஹமீத் ரசாவும் ஒருவர். இவர் துபாய் மாலில் உள்ள ஆப்பிள் ஸ்டோரிலிருந்து ஏழு ஐஃபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின், ‘மால் ஆஃப் தி எமிரேட்ஸ்’ (Mall of the Emirates) சென்று மேலும் 20 ஐஃபோன்களைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், துபாயைச் சேர்ந்த ரெய்ஹான் மற்றும் முஹம்மது ஷபீப் ஆகியோர் இன்னும் ஒரு படி மேலே சென்று, துபாயில் உள்ள இரண்டு இடங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளும் வகையில் மொத்தம் 76 ஐஃபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் சாதனங்களை முன்பதிவு செய்துள்ளனர்.
கடைக்குச் சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக, இந்த இருவரும் துபாய் மால் பார்க்கிங் இடத்திலேயே இரவு முழுவதும் தங்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் அருகிலேயே வசிக்கிறோம் என்றாலும், தூக்கத்தில் நேரம் கடந்துவிடுமோ என்று பயந்தோம், அதனால் நேற்று இரவே வந்துவிட்டோம், பின்னர் காலை 6 மணி அளவில் கடைக்குச் சென்றோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் 36 ஐபோன்கள் சேகரிப்பு
இந்த நண்பர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளாக ஐஃபோன்களை வாங்கி வருவதாகவும், பல ஆர்டர்கள் இந்தியாவில் உள்ள நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து வருகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“இன்று நாங்கள் 36 ஐஃபோன்களை முன்பதிவு செய்துள்ளோம். அதில் 14-ஐ இங்கிருந்து பெற்றுக்கொண்டோம். மீதமுள்ளவற்றை ‘மால் ஆஃப் தி எமிரேட்ஸ்’-லிருந்து பெற்றுக்கொள்வோம். நாளையும் மேலும் 40 ஐஃபோன்களை முன்பதிவு செய்துள்ளோம்,” என்று முஹம்மது கூறியுள்ளார்..
மேலும், இந்தச் சாதனங்களுக்காகத் தாங்கள் சுமார் 5,50,000 திர்ஹம்ஸ் செலவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரிய முதலீடு செய்திருந்தாலும், விற்பனையின் முதல் வாரத்தில் இந்த புதிய ஐஃபோன்களுக்கு அதிக விலை (premium) கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆகமொத்தம், புதிய ஐஃபோன் மாடல்களின் அறிமுக நாள் என்பது துபாயில் உள்ள ஐஃபோன் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, மறுவிற்பனையாளர்களுக்கும் ஒரு முக்கிய வணிக நிகழ்வாக மாறியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel