எதிஹாட் ரயில் நிறுவனம், ‘Q Mobility’ மற்றும் ‘Parkin’ ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான புதிய ஒப்பந்தத்தின் மூலம், எதிஹாட் ரயில் நிலையங்களைப் பயன்படுத்தும் பயணிகள் விரைவில் மிகவும் எளிதான மற்றும் தடையற்ற பார்க்கிங் வசதியைப் பெறவுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் கீழ், அபுதாபி, அல்-தைத் (Al Dhaid) மற்றும் ஃபுஜைரா (Fujairah) நிலையங்களில் உள்ள பார்க்கிங் வசதிகளை Q Mobility நிர்வகிக்கும் என்றும், அதேவேளையில், துபாய் நிலையத்தின் பார்க்கிங் வசதிகளை Parkin நிறுவனம் இயக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு முயற்சியானது, பாதுகாப்பான வசதிகள் மற்றும் வசதியான டிஜிட்டல் கட்டணச் செலுத்துதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த பார்க்கிங் மேலாண்மை மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை (smart solutions) எதிஹாட் ரயில் நிலையங்களின் கட்டமைப்பில் அறிமுகப்படுத்தும் என்று அக்டோபர் 1, வியாழக்கிழமையன்று மூன்று நிறுவனங்களும் அறிவித்தன.
எதிஹாட் ரயில் தனது பயணிகள் போக்குவரத்து வலையமைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 அன்று, துபாயில் அல்-யலாயிஸ் (Al Yalayis) மற்றும் ஷார்ஜாவில் அல்-தைத் (Al Dhaid) ஆகிய இரண்டு கூடுதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதில் அல்-தைத் நிலையம் ஷார்ஜாவின் முதல் எதிஹாட் ரயில் நிலையமாகும். ஷார்ஜாவின் இரண்டாவது நிலையம் மார்ச் 2027-இல் திறக்கப்படவுள்ளது.’
இது குறித்து எதிஹாட் ரயிலின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) அஸ்ஸா அல்சுவைதி (Azza Alsuwaidi) கூறுகையில், இந்த கூட்டு முயற்சியானது வசதியான பார்க்கிங் தீர்வுகள் மூலம் பயணிகள் நிலையங்களை எளிதாக அணுகுவதற்கும், வலையமைப்பு விரிவடையும் போது நிலையங்களுக்கு வந்து செல்வதை எளிதாக்குவதற்கும் உதவும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், பார்க்கின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) முகமது அல் அலி (Mohamed Al Ali) கூறுகையில், எதிஹாட் ரயிலின் துபாய் நிலையத்தில் பார்க்கிங் அணுகல் மற்றும் கட்டணச் செலுத்துதலை எளிதாக்கவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், பயணிகளுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கவும் தங்கள் நிறுவனத்தின் டிஜிட்டல் தீர்வுகள் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து, Q Mobility நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) முகமது ஹுசைன் கர்மாஸ்தாஜி (Mohamed Husain Karmastaji) பேசுகையில், நிலையங்களின் வலையமைப்பு முழுவதும் ஒருங்கிணைந்த பார்க்கிங் மேலாண்மை மாதிரியை உருவாக்க நிறுவனங்கள் இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கூட்டு முயற்சியானது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், பயணிகளின் அனுபவத்தை உயர்த்தவும், நிலையான மற்றும் நவீன போக்குவரத்து வசதியை ஆதரிக்கவும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, அனைத்து எதிஹாட் ரயில் நிலையங்களிலும் கார் நிறுத்துமிட வசதி உள்ளது. இருப்பினும், நிலையம், உள்ளே நுழையும் நேரம் மற்றும் வாகனத்தை நிறுத்தி வைக்கும் கால அளவு ஆகியவற்றைப் பொறுத்து கட்டணங்கள் மாறுபடும்.
பயணிகள் பார்க்கிங் இடத்தை முன்பதிவு செய்யவோ அல்லது முன்கூட்டியே பார்க்கிங் டிக்கெட்டைப் பெறவோ தேவையில்லை.
தங்கள் ரயில் புறப்படும் நேரத்திற்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்திவிட்டு நிலையத்தை வந்தடைவதற்குப் போதுமான நேரத்தை ஒதுக்குமாறு எதிஹாட் ரயிலின் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங் வசதிகள், சம்பந்தப்பட்ட பார்க்கிங் நிர்வாகியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel