இந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட தகவலின்படி, அவ்வப்போது பெய்யும் பலத்த மழை, இடி மற்றும் சாலைகளில் பார்வைத்திறனைக் குறைக்கக்கூடிய பலத்த காற்று ஆகியவற்றுக்குத் தயாராக இருக்குமாறு குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழை மேகங்கள் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளிலிருந்து உள்நாட்டை நோக்கி (அல் அய்ன், துபாய் மற்றும் அபுதாபிக்கு இடைப்பட்ட பகுதிகள் உட்பட) நகர்ந்து, பின்னர் அல் தஃப்ரா (Al Dhafra) பகுதியை நோக்கி விரிவடையும் என்று NCM தெரிவித்துள்ளது.
இது குறித்து NCM வானிலை ஆய்வாளர் டாக்டர் அகமது ஹபீப் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், திங்கட்கிழமை தொடங்கி வார இறுதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாறுபட்ட வானிலை நிலைகளுடன, மழை தொடரக்கூடும் என்று தெரிவித்துள்ளார்..
அமீரகத்தில் எங்கு மழை பெய்யக்கூடும்?
ஹபீப்பின் கூற்றுப்படி, துபாயின் உட்புறப் பகுதிகளையும் (மிர்டிஃப் அருகிலுள்ள பகுதிகள் உட்பட) மற்றும் துபாய்-அல் அய்ன் மற்றும் அபுதாபி-அல் அய்ன் ஆகியவற்றை இணைக்கும் சாலைகளிலும் மழை பெய்யக்கூடும்.
மழை பெய்ய வாய்ப்புள்ள பிற பகுதிகள்:
- ஸ்வேஹான் (Sweihan)
- அல் அய்ன் பகுதிகள்
- மதீனத் சையத் (Madinat Zayed)
- சையத் சிட்டி (Zayed City) மற்றும் அல் தஃப்ரா-வின் பிற பகுதிகள்
NCM வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின் படி, பொதுவாக லேசானது முதல் மிதமான மழை வரை எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வெப்பச்சலன மேகங்களின் (convective clouds) வளர்ச்சியால் சில பகுதிகளில் பலத்த மழையும் இடியும் ஏற்படலாம்.
அரேபியக் கடலில் இருந்து பரவும் குறைந்த காற்றழுத்த மண்டலமும், தென்மேற்கிலிருந்து நகரும் மற்றொரு குறைந்த காற்றழுத்த மண்டலமும் இணைந்து வளிமண்டலத்தில் கூடுதல் ஈரப்பதத்தைக் கொண்டு வருவதே இந்த வானிலை மாற்றத்துக்கு காரணம் என்று ஹபீப் விளக்கமளித்துள்ளார். அவரது கூற்றுப்படி, மேல்நோக்கி எழும் காற்று இந்த மேகங்கள் உருவாவதற்கு உதவுகிறது. இவை முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் உருவாகி, பின்னர் உள்நாட்டை நோக்கி நகர்கின்றன.
தூசி, மணல் மற்றும் பார்வைத்திறன் குறைவு ஏற்பட வாய்ப்பு
இந்த நிலையற்ற வானிலை மழையைத் தாண்டி வேறு சில விளைவுகளையும் ஏற்படுத்தலாம். உருவாகும் மேகங்களிலிருந்து கீழ்நோக்கி வீசும் காற்றோட்டம் (downdrafts), குறிப்பாக திறந்தவெளிகளில் தூசி மற்றும் மணலை எழுப்பக்கூடிய பலத்த காற்றை உருவாக்கக்கூடும் NCM எச்சரித்துள்ளது.
“மழை லேசானது முதல் மிதமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சில சமயங்களில் பலத்த மழையாகவும் இருக்கலாம்; வெப்பச்சலன மேகங்களால் இடி மின்னல் நிகழ்வுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது,” என்று ஹபீப் கூறியுள்ளார்.
கீழ்நோக்கி வீசும் காற்றோட்டத்தால் பலத்த காற்று உருவாகி, பார்வைத்திறனைக் குறைக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழையின் போது, குறிப்பாக பார்வைத்திறன் குறையும்போது, குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மலைப்பாங்கான பகுதிகள் போன்ற ஆபத்தான இடங்களைத் தவிர்க்குமாறும் NCM அறிவுறுத்தியுள்ளது.
முக்கியமாக, வாகன ஓட்டிகள் மாறிவரும் சாலைச் சூழல் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். அத்துடன் வானிலை மற்றும் போக்குவரத்து தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இலையுதிர் காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் படிப்படியாகக் குறையும் வெப்பநிலை
இவ்வாறு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருந்தாலும், உடனடி காலத்தில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேகமூட்டம் காரணமாக உள்ளூர் அளவில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றாலும், அதே காற்று மண்டலமே நாட்டின் மீது தொடர்ந்து நிலவும் என்று ஹபீப் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கனவே வெப்பநிலை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் இருந்து அக்டோபர் முதல் வாரம் வரையிலான காலத்தில் வெப்பநிலை சுமார் 4°C முதல் 5°C வரை குறைந்துள்ளது.
“அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதேவேளையில் இரவு மற்றும் அதிகாலை நேர வெப்பநிலையும் குறைந்து வருகிறது. நாட்டின் உட்புறப் பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள சில நிலையங்களில் வெப்பநிலை 20°C அல்லது அதற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.
மேற்கூறியவாறு வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பதிவாகும் அளவுகள் பருவக்கால சராசரியை விடச் சற்று அதிகமாகவே இருக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அமீரகத்தின் வானிலை ஏன் விரைவாக மாறக்கூடும்?
இம்மாற்றங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் இலையுதிர் காலத்திற்கு இயல்பானவை. இக்காலத்தில் வானிலை நிலையான நிலையிலிருந்து நிலையற்ற நிலைக்கு மிகக் குறுகிய காலத்திற்குள் மாறக்கூடும்.
பகல் நேரச் சூழல் ஓரளவு நிலையற்றதாக மாறக்கூடும் என்றும், அதேவேளையில் இரவு நேரங்களில், குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் ஈரப்பதம் அதிகரிக்கக்கூடும் என்றும், சில இடங்களில் பனிமூட்டமும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) ரேடார், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் கண்காணிப்பு நிலையங்களின் தரவுகளைப் பயன்படுத்தி 24 மணி நேரமும் வானிலை நிலவரத்தைக் கண்காணித்து வருகிறது.
வரும் நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்புகளைப் பின்பற்றுமாறும், திறந்தவெளிகள் அல்லது மலைப்பகுதிகளுக்கு அருகில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel