துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), நகரின் மூன்று முக்கிய சாலைகளான உம் சுகீம் ஸ்ட்ரீட் (Umm Suqeim Street), அல் வாசல் சாலை (Al Wasl Road) மற்றும் அல் சஃபா ஸ்ட்ரீட் (Al Safa Street) ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும், அத்துடன் ஜுமைரா ஸ்ட்ரீட்டில் உள்ள ஏழு இண்டர்செக்ஷன்களை மேம்படுத்துவதற்கும் ஒரு பெரிய ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, 11 கி.மீ நீளத்திற்குப் பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைப்பதுடன், சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் உதவும் வகையில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததும், உம் சுகீம் ஸ்ட்ரீட்டின் போக்குவரத்து கொள்ளளவு இரு திசைகளிலும் மணிக்கு 16,000 வாகனங்கள் என்ற அளவிற்கு உயரும் என்றும், அதேவேளையில், அல் வாஸ்ல் மற்றும் அல் சஃபா ஸ்ட்ரீட் ஒவ்வொன்றும் மணிக்கு 12,000 வாகனங்கள் என்ற அளவில் போக்குவரத்தைக் கையாளும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண நேரங்கள் குறையும்
அதுமட்டுமில்லாமல், இந்த மேம்பாட்டுப் பணிகள் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உம் சுகீம் சாலையில் மட்டும், ஜுமைரா சாலைக்கும் அல் கைல் சாலைக்கும் இடையிலான பயண நேரம் 20 நிமிடங்களிலிருந்து வெறும் 6 நிமிடங்களாகக் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை வாரியான திட்டச் சிறப்பம்சங்கள்
உம் சுகீம் ஸ்ட்ரீட்
- ஆறு இன்டர்செக்சன்களின் மேம்பாடு
- நான்கு பாலங்கள் மற்றும் இரண்டு சுரங்கப்பாதைகள் (மொத்தம் 4.1 கி.மீ)
- ஜுமைரா ஸ்ட்ரீட் மற்றும் அல் வாஸ்ல் சாலையில் முக்கிய சுரங்கப்பாதைகள் அமைத்தல்
- போக்குவரத்துப் பாதைகள் ஒன்றோடொன்று குறுக்கிடுவதைத் தவிர்க்க ஷேக் சையத் சாலையில் பாலங்கள் அமைத்தல்
அல் வாஸ்ல் சாலை
- 15 கி.மீ நீளமுள்ள சாலைப் பகுதி, ஒவ்வொரு திசையிலும் இரண்டு வழிப்பாதைகளிலிருந்து மூன்று வழிப்பாதைகளாக விரிவாக்கம் செய்யப்படுகிறது
- ஏழு இன்டர்செக்சன்கள் மேம்படுத்தப்படுகின்றன
- ஐந்து சுரங்கப்பாதைகள் (மொத்தம் 3.85 கி.மீ)
அல் சஃபா ஸ்ட்ரீட்
- ஷேக் சையத் சாலை மற்றும் அல் வாஸ்ல் சாலைக்கு இடைப்பட்ட 1.5 கி.மீ பகுதி மேம்படுத்தப்படுகிறது
- இரண்டு பாலங்கள் மற்றும் இரண்டு சுரங்கப்பாதைகள் (மொத்தம் 3.12 கி.மீ) அமைக்கப்படுகிறது.
ஜுமைரா ஸ்ட்ரீட்
- போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் வகையில், தரைத்தள மட்டத்தில் ஏழு இன்டர்செக்சன்கள் மேம்படுத்தப்படுகின்றன
இத்திட்டமானது சாலைகளை அகலப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது என்பதையும் தாண்டி விரிவடைகிறது. இது பாதசாரிகளுக்கான நடைபாதைகள், மிதிவண்டிப் பாதைகள், பொதுப் பூங்காச் சதுக்கங்கள் (Boulevard plazas) மற்றும் சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நகர்ப்புற இடங்களை மேம்படுத்துவதையும் உள்ளடக்கியுள்ளது.
RTA-வின் தலைமை இயக்குநரான மத்தார் அல் தாயர் (Mattar Al Tayer) வெளியிட்ட தகவலின்படி, இத்திட்டமானது கடற்கரைகள், ஹோட்டல்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சேவையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஷேக் சையத் சாலை, அல் கைல் சாலை, ஷேக் முகமது பின் சையத் சாலை மற்றும் எமிரேட்ஸ் சாலை போன்ற முக்கிய வழித்தடங்களுக்கு இடையிலான இணைப்பையும் இது வலுப்படுத்தும்.
போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தவும், நகர்ப்புற வளர்ச்சியை ஆதரிக்கவும், துபாயை ஒரு உலகளாவிய வணிக மற்றும் முதலீட்டு மையமாக வலுப்படுத்தவும் வகுக்கப்பட்டுள்ள பரந்த திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மேம்பாட்டுப் பணிகள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel